இந்தியப் பாடகர் சுபீன் கார்க் உயிர்காப்பு அங்கி இன்றி நீந்தி கடலில் மூழ்கினார்: மரண விசாரணை நீதிமன்றம்

2 mins read
7f8dc23d-ad5a-4e26-8dff-63d29fe4285c
சுபீன் கார்க் கடலில் மூழ்கியபோது அவரது ரத்தத்தில் அளவுக்கு அதிகமான மது இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது. - படம்: எக்ஸ் தளம்/ சுபீன் கார்க்

பிரபல இந்தியப் பாடகர் சுபீன் கார்க் சிங்கப்பூருக்குச் சொந்தமான லாசரஸ் தீவுக்கு அருகில் உள்ள கடற்பகுதியில் உயிர்காப்பு அங்கி அணியாமல் நீந்தி கடலில் மூழ்கியதாக மரண விசாரணை நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

கடலில் மூழ்கியபோது அவர் குடிபோதையில் இருந்ததாகவும் அவரது ரத்தத்தில் அளவுக்கு அதிகமான மது இருந்ததாகவும் காவல்துறை விசாரணை அதிகாரி புதன்கிழமையன்று (ஜனவரி 15) தெரிவித்தார்.

53 வயது கார்க் மதுபானம் அருந்திவிட்டு படகிலிருந்து கடலில் குதித்து நீந்தியதாகத் தெரிவிக்கப்பட்டது.

2025ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் உயிர்காப்பு அங்கியை அணிந்துகொள்ளுமாறு அவரிடம் பலமுறை தெரிவிக்கப்பட்டதாகவும் அவ்வாறு செய்ய அவர் மறுத்துவிட்டதாகவும் காவல்துறை உதவி கண்காணிப்பாளர் (ஏஎஸ்பி) டேவிட் லிம் மரண விசாரணை நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

படகிற்குத் திரும்புமாறு அவரது நண்பர்கள் அவரைக் கேட்டுக்கொண்டனர்.

அப்போது கார்க் திடீரென்று கடலில் அசைவற்ற நிலையில் குப்புறக் கிடந்ததாக கடலோரக் காவற்படையைச் சேர்ந்த ஏஎஸ்பி லிம் கூறினார்.

அதைப் பார்த்த அவரது நண்பர்கள் அவரைப் படகின் மேல் இழுத்து வந்து முதலுதவி வழங்கியதாகத் தெரிவிக்கப்பட்டது.

ஆனால் 2025ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 19ஆம் தேதியன்று கார்க் மருத்துவமனையில் மாண்டார்.

அவர் கடலில் மூழ்கியதால் மரணம் அடைந்தார் என அதிகாரபூர்வமாகத் தெரிவிக்கப்பட்டது.

கார்க், இந்தியாவின் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த பிரபல பாடகர்.

சிங்கப்பூரில் நடைபெற்ற வடகிழக்கு இந்திய விழாவில் கலந்துகொள்ள அவர் சிங்கப்பூருக்கு வந்திருந்தார்.

அந்தக் கலாசார விழாவுக்கு சிங்கப்பூரில் உள்ள அசாமிய சமூகத்தினர் ஏற்பாடு செய்திருந்தனர்.

கார்க் தொடர்பாக நடைபெற்று வரும் வழக்கு விசாரணையில் முதல் சாட்சியாக ஏஎஸ்பி லிம் சாட்சியம் அளித்தார்.

வழக்கு விசாரணையில் பொதுமக்கள் பலரும் கார்க்கின் உறவினர்கள் இருவரும் கலந்துகொண்டனர்.

இவ்வழக்கில் மொத்தம் 35 சாட்சிகள் இருப்பதாக அரசாங்க வழக்கறிஞர் ஷான் டே தெரிவித்தார்.

அந்தச் சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை தொடர்கிறது.

குறிப்புச் சொற்கள்