சிங்கப்பூரில் அதிகம் செலவழிக்கும் இந்திய சுற்றுலாப் பயணிகள்: புதிய ஆய்வு

2 mins read
0ecd4208-bf12-4963-92b9-d3de7449e0e3
சிங்கப்பூரில் இந்திய சுற்றுலாப் பயணிகள் தங்கும் காலமும் அதிகமாக உள்ளது. - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூரில் இந்திய சுற்றுலாப் பயணிகள் அதிகம் செலவழிப்பதாக புதிய தரவுகள் காட்டுகின்றன.

கடந்த 2025ஆம் ஆண்டின் முதல் பாதியில் இந்தியச் சுற்றுலாப் பயணிகள் சிங்கப்பூரில் 812.17 மில்லியன் வெள்ளியை செலவிட்டுள்ளனர்.

இது, கடந்த ஆண்டு இதே காலகட்டத்தைவிட 4.40 விழுக்காடு அதிகம் என்று சிங்கப்பூர் பயணத் துறைக்கழகத்தின் (எஸ்டிபி) புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும் இந்திய சுற்றுலாப் பயணிகள் ஆடம்பரப் பொருள்களுக்கு அதிகம் செலவழிப்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது.

இது, சிங்கப்பூரின் உயர் மதிப்பு வாய்ந்த சில்லறைக் கடைகளுக்கு உதவுவதாக உயர்மட்ட முன்னணி வர்த்தகச் சங்கம் திங்கட்கிழமை (டிசம்பர் 15) தெரிவித்தது.

“இந்தியப் பயணிகள், சிங்கப்பூரின் முக்கியத்துவம் வாய்ந்த சந்தைகளில் முக்கியமானவர்களாக இருக்கின்றனர். உயர்மதிப்புள்ள பொருள்களின் விற்பனை அதிகரிப்பதற்கு அவர்கள் உதவுகின்றனர்,” என்று ஆர்ச்சர்ட் சாலை வர்த்தகர் சங்கத்தின் (ORBA) தலைவர் மார்க் ஷா கூறினார்.

ஆர்ச்ர்ட் சாலை வர்த்தகத்தை மேம்படுத்துவதிலும் நிர்வகிப்பதிலும் ஓஆர்பிஏ முக்கிய பங்கு வகிக்கிறது.

இந்தியாவைத் தவிர சீனா, இந்தோனீசியா நாடுகளிலிருந்து வரும் சுற்றுலாப் பயணிகளும் ஆடம்பரப் பொருள்களில் அதிகம் செலவழிக்கின்றனர்.

“இந்திய பயணிகள் அதிகம் செலவழிப்பதோடு அவர்கள் இங்கு தங்கும் காலம் சராசரியைவிட அதிகமாக 6.3 நாள்களாக உள்ளது. இப்படி நீண்ட நாள்கள் தங்குவதால் அவர்கள் சில்லறைக் கடைகள், உணவகங்கள், பொழுதுபோக்கு நிலையங்களில் செலவழிக்கும் தொகையும் அதிகம்,” என்று திரு ஷா தெரிவித்தார்.

ஆண்டு இறுதிப் பண்டிகைக் காலத்தில் ஆர்ச்சர்ட் சாலையின் கிறிஸ்துமஸ் சந்தைக்கு அதிகமானோர் வருவது குறித்து அவர் தமது கருத்தைப் பகிர்ந்துகொண்டார்.

மாஸ்டர்கார்டு எகனாமிக்ஸ் இன்ஸ்டிடியூட்டின் 2024ஆம் ஆண்டின் பயணங்களுக்கான அறிக்கையில், இந்தியாவில் அதிகரித்து வரும் செல்வந்தர்கள், ஆடம்பர அனுபவங்கள், நகைகள் மற்றும் உயர்மட்ட நவநாகரிகத்தைத் தேடி அதிகம் செலவு செய்வதாகவும் இது, அவர்கள் விரும்பும் வாழ்க்கை பாணியைப் பிரதிபலிப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்