இந்தியச் சுற்றுப்பயணச் சந்தையைக் குறிவைக்கும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்

இந்தியச் சுற்றுப்பயணச் சந்தையைக் குறிவைக்கும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்

3 mins read
இந்தியாவின் மலிவுக் கட்டண விமான நிறுவனமான இண்டிகோ நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பீட்டர் எல்பர்ஸ், உலக விமானப் போக்குவரத்தின் முதன்மை மையமாக விளங்க இந்தியா நோக்கம் கொண்டுள்ளது என்றார்.
02bf3e6b-aa62-4bcc-ad30-f842c5b94f39
சாங்கி விமானப் போக்குவரத்துத் துறை உச்சநிலை மாநாட்டில் திங்கட்கிழமை (பிப்ரவரி 2) உரையாற்றிய சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி கோ சூன் ஃபோங். - படம்: புளூம்பர்க்

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் (எஸ்ஐஏ) திட்டங்களுக்கு இந்தியச் சுற்றுப்பயணச் சந்தை அத்தியாவசியமானது என்றும் சீன, ஜப்பானிய சுற்றுப்பயணச் சந்தைகளுடன் போட்டியிட்டு உலக விமானப் போக்குவரத்து வளர்ச்சியின் இயந்திரங்களாக அவை உள்ளன என்றும் எஸ்ஐஏ தலைமை நிர்வாக இயக்குநர் கோ சூன் ஃபொங் கூறியுள்ளார்.

“பல ஆண்டுகளுக்கு முன்னர் ஜப்பானியச் சுற்றுப்பயணிகள் உலகம் முழுவதும் சென்றுவந்தனர். அண்மைய ஆண்டுகளில் சீனச் சுற்றுப்பயணிகளைப் பார்க்க முடிந்தது. இனி அதிக எண்ணிக்கையில் இந்தியச் சுற்றுப்பயணிகளை உலகம் முழுவதும் பார்க்க முடியும்,” என்று திரு கோ தெரிவித்தார்.

சாங்கி விமானப் போக்குவரத்துத் துறை உச்சநிலை மாநாட்டில் திங்கட்கிழமை (பிப்ரவரி 2) உரையாற்றிய அவர், உலக அளவில் மாறிவரும் பயணத் தேவைகள் தெற்காசியாவை இலக்காகக் கொண்டுள்ளதால் விமான நிறுவனங்கள் அவற்றின் கட்டமைப்புகளைத் தகவமைத்துகொண்டால்தான் நிலைக்க முடியும் என்றார்.

ஏர் இந்தியா நிறுவனத்தால் இழப்பு

ஏர் இந்தியா நிறுவனத்தில் எஸ்ஐஏ செய்துள்ள ஏறத்தாழ $1 பில்லியன் முதலீட்டை ஆதரிக்கும் வகையில் அவரது கருத்துகள் அமைந்துள்ளதாக பிஸ்னஸ் டைம்ஸ் குறிப்பிட்டது.

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானங்கள்.
சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானங்கள். - ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் கோப்புப் படம்.

கடந்த நவம்பர் மாதம் வெளியிடப்பட்ட சிங்கப்பூர் ஏர்லைன்சின் காலாண்டு முடிவுகளில் 82.1 விழுக்காடு லாபம் சரிந்ததற்கு ஏர் இந்தியாவில் செய்யப்பட்ட முதலீடே முக்கியக் காரணமாக சுட்டிக்காட்டப்பட்டது. இரண்டாம் காலாண்டின் நிகர லாபம் $52 மில்லியனாகப் பதிவானது. அதற்கு முந்தைய ஆண்டின் அதே காலகட்டத்தில் சிங்கப்பூர் ஏர்லைன்சின் லாபம் $290 மில்லியன்.

இருப்பினும் ஏர் இந்தியாவில் செய்துள்ள முதலீடு நீண்டகால உத்தி என்று தற்காத்துப் பேசியுள்ளார் திரு கோ.

கடந்த ஜூன் மாதம் ஏர் இந்தியா விமானம் விழுந்து நொறுங்கிய சம்பவம் அந்த நிறுவனத்திற்குக் கிட்டத்தட்ட $2.1 பில்லியன் இழப்பை உண்டாக்கியிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சிங்கப்பூர் ஏர்லைன்சின் நீண்டகால உத்தியில் இந்தியச் சுற்றுப்பயணச் சந்தை

இத்தகைய தடைகளைத் தாண்டி இரு நிறுவனங்களும் மேலும் ஒரு வர்த்தக ஒத்துழைப்புக் கட்டமைப்பில் கையெழுத்திட்டுள்ளன. இரு நிறுவனங்களுக்கும் இடையிலான பங்காளித்துவம் மேலும் வலுவடைய இது வகைசெய்கிறது.

அடுத்தக் கட்ட விமானப் போக்குவரத்துத் தேவைகளுக்குத் தகவமைத்துக்கொள்ளும் வகையில் எஸ்ஐஏ இந்தியாவில் பன்முக-மைய உத்தியில் கவனம் செலுத்துவதைத் திரு கோ கோடிட்டுக்காட்டினார்.

ஏற்கெனவே சேவை வழங்கும் விமான நிலையங்களைத் தவிர்த்து மேலும் பல முனையங்களுக்கும் சேவை வழங்கினால்தான் தேவைகளைப் பூர்த்தி செய்யமுடியும் என்று அவர் கூறினார்.

இந்தியச் சந்தையில் போட்டியிடும் இண்டிகோ

அதே கருத்தரங்கில் பேசிய இந்தியாவின் மலிவுக் கட்டண விமான நிறுவனமான இண்டிகோ நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பீட்டர் எல்பர்ஸ், உலக விமானப் போக்குவரத்தின் முதன்மை மையமாக விளங்க இந்தியா நோக்கம் கொண்டுள்ளதைக் குறிப்பிட்டு பேசினார்.

இந்தியாவின் மலிவுக் கட்டண விமான நிறுவனமான இண்டிகோ நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பீட்டர் எல்பர்ஸ்.
இந்தியாவின் மலிவுக் கட்டண விமான நிறுவனமான இண்டிகோ நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பீட்டர் எல்பர்ஸ். - படம்: புளூம்பர்க்

உலக மக்கள் தொகையின் 65 விழுக்காட்டினர் இந்தியாவிலிருந்து ஆறு மணி நேரத்திற்குள் விமானப் பயணம் மேற்கொள்ளும் தொலைவில்தான் உள்ளனர் என்பதை அவர் எடுத்துரைத்தார்.

இண்டிகோ, ஏர் இந்தியா விமானங்கள்.
இண்டிகோ, ஏர் இந்தியா விமானங்கள். - படம்: புளூம்பர்க்

இந்தியாவின் 1.47 பில்லியன் மக்கள் தொகையில் 90 விழுக்காட்டினர், இண்டிகோ சேவை வழங்கும் விமான நிலையத்திற்கு 100 கிலோமீட்டர் தொலைவுக்குள் வசிப்பதை அவர் சுட்டினார்.

இண்டிகோ இன்னும் அதிக எண்ணிக்கையில் ஏர்பஸ் A321 XLR போன்ற தொலைதூர விமானங்களுடன் அனைத்துலகச் சேவையை விரிவாக்க முனைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

குறிப்புச் சொற்கள்