தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சாங்கி விமான நிலையத்தில் வாசனைத் திரவம் திருட்டு; இந்தியப் பெண் கைது

2 mins read
dc1f2dd3-769e-4c0d-a3f2-000b30b15785
அப்பெண் பயணி திருடிய நான்கு வாசனைத் திரவப் புட்டிகளின் மொத்த மதிப்பு $742. - கோப்புப்படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சாங்கி விமான நிலையத்தில் இறங்கி, வேறு விமானத்திற்கு மாறவிருந்த இந்தியப் பெண் பயணி ஒருவர், அங்கிருந்த இரு கடைகளில் வாசனைத் திரவப் புட்டிகளைத் திருடிய சந்தேகத்தின்பேரில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

விமான நிலையத்தின் இரண்டாம் முனையத்தில் இம்மாதம் 15ஆம் தேதி அவரைக் காவல்துறை கைதுசெய்தது.

இரு வாசனைத் திரவப் புட்டிகளுக்குப் பணம் செலுத்தாமல் ஒப்பனைப்பொருள் விற்கும் ஒரு கடையிலிருந்து அந்த 28 வயதுப் பெண் வெளியேறியதைக் கண்காணிப்புப் படக்கருவியில் பதிவான காணொளி காட்டியது.

‘தி ஷிலா டூட்டி ஃபிரீ காஸ்மெட்டிக் ஷாப்’ எனும் அக்கடையின் ஊழியர்கள் சரக்கிருப்பு குறித்துக் கணக்கெடுத்தபோது இரு வாசனைத் திரவப் புட்டிகள் குறைவாக இருப்பதை அறிந்தனர்.

இதுகுறித்து அவர்கள் பாதுகாவல் அதிகாரி ஒருவருக்குத் தகவல் தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து, அப்பெண் பயணி சிங்கப்பூரைவிட்டு வெளியேறுமுன் கைதுசெய்யப்பட்டார் என்று புதன்கிழமை (மார்ச் 19) காவல்துறை தெரிவித்தது.

வாசனைத் திரவப் புட்டிகள் காணாமல்போனது தொடர்பில் அப்பெண்ணிடம் விசாரித்தபோது அவர் ஒரு புட்டியைத் தமது பையிலிருந்து வெளியில் எடுத்தார். ஆனால், அவரது பையைச் சோதனையிட்டபோது அதனுள் மேலும் மூன்று புட்டிகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இன்னொரு கடையிலிருந்து அவர் மேலும் இரு புட்டிகளைத் திருடியது முதற்கட்ட விசாரணைமூலம் தெரியவந்தது.

பின்னர் அந்த வாசனைத் திரவப் புட்டிகள் அனைத்தும் உரிய கடைகளிடம் ஒப்படைக்கப்பட்டன. அவற்றின் மொத்த மதிப்பு $742.

அவர்மீது வியாழக்கிழமை நீதிமன்றத்தில் குற்றம் சுமத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

திருட்டுக் குற்றம் உறுதிப்படுத்தப்பட்டால், அப்பெண்ணுக்கு ஏழாண்டுவரை சிறையோ அபராதமோ இவ்விரண்டு தண்டனைகளுமோ விதிக்கப்படலாம்.

குறிப்புச் சொற்கள்