விமானப் பயணத்தின்போது பெண் சிப்பந்தியிடம் தகாத முறையில் நடந்துகொண்டதாக 20 வயது இந்திய ஆடவர்மீது செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 22) நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படவுள்ளது.
இவ்வாண்டு பிப்ரவரி 28ஆம் தேதி நண்பகல் 12.05 மணியளவில் அந்த 28 வயதுப் பெண்ணிடம் அந்த ஆடவர் அத்துமீறியதாகக் காவல்துறை தெரிவித்தது.
விமானப் பயணத்தின்போது அந்தப் பெண் ஊழியர், பெண் பயணி ஒருவரைக் கழிவறைக்கு அழைத்துச் சென்றதாகக் கூறப்பட்டது. அப்போது, கழிவறைத் தரையில் ஒரு மெல்லிழைத்தாள் இருந்ததை அந்த ஊழியர் கண்டார்.
அதனை எடுப்பதற்காக அவர் குனிந்தபோது, பின்னால் இருந்து அவரைப் பிடித்த அந்த ஆடவர், தன்னோடு அவரையும் கழிவறைக்குள் தள்ளியதாகச் சொல்லப்படுகிறது. இதனைக் கண்ட அந்தப் பெண் பயணி, உடனடியாக அந்தப் பெண் ஊழியர் கழிவறையிலிருந்து வெளியேற உதவினார்.
இதுபற்றி விமான ஊழியர்களின் மேற்பார்வையாளருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. விமானம் தரையிறங்கியதும் சாங்கி விமான நிலையக் காவல்துறையினரால் அந்த ஆடவர் கைதுசெய்யப்பட்டார்.