தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சமூகத்தின் சவால்களைச் சமாளிக்க இளையர் திறன் மேம்பாடு முக்கியம்: தினேஷ்

2 mins read
09fc59d3-bacc-4d0e-b2b8-e3e0cc2b3200
சிண்டா இளையர் மன்றம் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 15) ஏற்பாடு செய்திருந்த சிண்டா இளம் தலைவர்கள் கருத்தரங்கில் பங்கேற்ற இளையர்களுடன் உரையாடும் மனிதவள; கலாசார, சமூக, இளையர்துறை துணை அமைச்சர் தினேஷ் வாசு தாஸ்.  - படம்: கீர்த்திகா ரவீந்திரன் 

மூப்படையும் சமூகம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, வெளிநாட்டு ஊழியர்களுக்கு எதிரான பாகுபாடு, குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கான ஆதரவு போன்ற சவால்கள் இந்தியச் சமூகத்தில் இருந்து வருகின்றன.

இவற்றைச் சமாளிக்க இந்திய இளையர்கள் ஒன்றுசேர்ந்து தங்கள் திறன்களை மேம்படுத்துவது முக்கியம் என்று வலியுறுத்தினார் மனிதவள, கலாசார, சமூக, இளையர்துறை துணை அமைச்சர் தினேஷ் வாசு தாஸ்.

சிங்கப்பூர் இந்தியர் மேம்பாட்டுச் சங்க (சிண்டா) இளையர் மன்றம் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 15) ஏற்பாடு செய்திருந்த சிண்டா இளம் தலைவர்கள் கருத்தரங்கில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு திரு தினேஷ் உரையாற்றினார்.

இளையர்களின் புத்தாக்கச் சிந்தனையைப் பாராட்டிய திரு தினேஷ், இதுபோன்ற முயற்சிகள் இந்திய இளையர்களுக்கு ஒரு வாழ்நாள் கற்றலாக அமையும் என்றார்.

“அடுத்த தலைமுறை இந்தியத் தலைவர்களை வளர்ப்பதில் நாம் எடுக்கும் அவசியமான படி இது,” என்று தெரிவித்தார்.

ரிட்ஜ் வியூ தங்குமிடக் கல்லூரி வளாகத்தில் மூன்று நாள்கள் நடைபெற்ற கருத்தரங்கில் பல்வேறு உயர்கல்வி நிலையங்களிலிருந்து கிட்டத்தட்ட 80 இளையர்கள் கலந்துகொண்டனர்.

கருத்தரங்கின் இறுதி நாளன்று ‘எக்கோஸ் ஆஃப் இன்சைட்’ (Echoes of Insight) என்ற நிகழ்ச்சிவழி தாங்கள் அனுபவித்த சமூக சவால்கள், அவற்றைச் சமாளிக்க கையாண்ட உத்திகள், அதிலிருந்து கிடைத்த முக்கிய அனுபவங்களை தங்கள் படைப்பாற்றலைப் பயன்படுத்தி இளையர்கள் பகிர்ந்தனர்.

அவர்களில் ஒருவரான ஆண்டர்சன் சிராங்கூன் தொடக்கக் கல்லூரி மாணவர் அப்துல் ரஹீம், 17, சனிக்கிழமை (ஜூன் 14) தம் குழுவுடன் ஸ்ரீ நாராயண மிஷன் தாதிமை இல்லத்துக்குச் சென்ற அனுபவத்தை தமிழ் முரசுடன் பகிர்ந்தார்.

“ஒவ்வொரு குடும்பத்திற்கும் மூத்தோர் ஆணிவேராக உள்ளனர். அவர்கள் வாழ்ந்த வாழ்கை அனுபவங்களிலிருந்து கற்றுக்கொள்வது மிகவும் அவசியம்,” என்றார் ரஹீம்.

தந்தையர் தினத்தை முன்னிட்டு தாதிமை இல்லத்துக்குச் சென்ற இளையர்கள் அங்குள்ள முதியோருக்கு தந்தையர் தின அட்டை செய்ய உதவினார்கள்.

“தாதிமை இல்லத்தில் முதியோருடன் சேர்ந்து தந்தையர் தின அட்டையைத் தயாரித்த அனுபவம், அவர்களுடன் இணைந்து உறவாடும் வாய்ப்பாக அமைந்தது. என் தாத்தா பாட்டியுடன் பேசுவதுபோல் இருந்தது,” என்றார் சிங்கப்பூர் சமூக அறிவியல் பல்கலைக்கழக மாணவி ரேஷ்மா சுரேஷ்குமார், 23.

தாத்தா, பாட்டி இருவரும் இந்தியாவில் வசிப்பதால் அவர்களை நேரடியாகச் சந்தித்துப் பேச இயலவில்லை என்றார் அவர்.

இளையர்கள் இதுபோன்ற சமூக நலன் கொண்டுள்ளதால் சில சூழ்நிலைகள் மீதான தவறான கண்ணோட்டம் மாறக்கூடும் என்றார் தொண்டூழியர் பாலசுந்தரி மாமன்னன், 19.

“இதனால் பல சமூகங்களுக்கு உதவ விரும்பும் ஆர்வம் இளையர்களுக்கு ஏற்படுகிறது,” என்றார் அவர்.

குறிப்புச் சொற்கள்