இந்தியர்கள் அன்று முதல் இன்று வரை தங்கள் கடின உழைப்பால் சிங்கப்பூர் சமூகத்தின் முக்கிய அங்கமாகத் திகழ்ந்து வருகிறார்கள் என்று கலாசார, சமூக, இளையர்துறை துணை அமைச்சர் தினேஷ் வாசு தாஸ் தெரிவித்துள்ளார்.
திங்கட்கிழமை (செப்டம்பர் 22) நாடாளுமன்றத்தில் தனது முதலாவது உரையை நிகழ்த்திய திரு தினேஷ், தமது தாத்தா இந்தியாவிலிருந்து சிங்கப்பூருக்கு வந்தபோது, அவரிடம் இருந்தது நம்பிக்கையும் கடின உழைப்பும் மட்டுமே என்று தமது தந்தை அடிக்கடி கூறியதை நினைவுகூர்ந்தார்.
திரு தினேஷின் தாத்தா, கட்டுமானத் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்திய ஒப்பந்ததாரர். கடுமையான வேலையைச் செய்தாலும், ஒருபோதும் அவர் குறை சொல்லியதில்லை. தமது அப்பாவுக்கு தாத்தா அளித்த அறிவுரை: “இன்று நான் பாடுபட்டு உழைக்கிறேன், நாளை நீ நன்றாக வாழ வேண்டும் என்பதற்காக,” என்பதே.
“இது என் குடும்பத்தின் கதை மட்டும் அல்ல. பல இந்திய முன்னோர்களின் கதையும்கூட. அவர்கள் தொழிலாளர்களாக, வர்த்தகர்களாக, ஆசிரியர்களாக இங்கு வந்தார்கள். பல சிரமங்களை எதிர்கொண்டார்கள். ஆனால், அதே சமயம் அவர்கள் குடும்பங்களை வளர்த்தெடுத்தார்கள். பள்ளிகள், கோவில்கள், பள்ளிவாசல்கள், தேவாலயங்கள், சமூக அமைப்புகளை நிறுவினார்கள். அவை எல்லாம் இன்று வரை நிலைத்திருக்கின்றன. அவர்கள் அன்று செய்த தியாகங்களால்தான் இன்றைய தலைமுறைகள் முன்னேறியுள்ளன,” என்றார் மனிதவள துணை அமைச்சருமான திரு தினேஷ்.
“அண்மைய காலங்களில், சிங்கப்பூருக்குப் புதிய இந்தியக் குடியேறிகளும் வந்து சேர்ந்துள்ளனர். பலர் படிக்கவோ, வேலை செய்யவோ இங்கு வந்தார்கள். நாளடைவில், அவர்கள் சிங்கப்பூரைத் தங்கள் நிரந்தர இல்லமாகத் தேர்ந்தெடுத்தனர். அவர்களுடைய கனவுகள் நம் முன்னோருடையது போலவேதான். நல்ல குடும்பம், போதுமான வருமானம், நாட்டிற்கு அர்ப்பணிப்பு.
“இன்றைய இந்தியச் சமூகம் பன்முகத் தன்மையுடையது. நாம் தமிழர்கள், பஞ்சாபிகள், குஜராத்திகள், மலையாளிகள், தெலுங்கர்கள், சிந்திக்கள் மற்றும் பலர். ஆனால், எல்லாவற்றுக்கும் மேலாக நாம் அனைவரும் சிங்கப்பூரர்கள்.
“எனவே, இன்று நான் இங்கு நிற்பது இந்திய சமூகத்தின் பிரதிநிதியாக மட்டும் அல்ல. சிங்கப்பூர் சமூகத்தின் ஓர் அங்கமாகவே நிற்கிறேன். எங்கள் சமூகம் தனித்து முன்னேறவில்லை. நாட்டு முன்னேற்றத்தின் ஒரு பகுதியே அது,” என்று விவரித்தார்.
“சிங்கப்பூரின் வலிமை என்பது வேற்றுமையில் நாம் காணும் ஒற்றுமை. அந்த ஒற்றுமைக்கு, ஒவ்வொரு சமூகமும் பங்களிக்க வேண்டும். நம் இளைஞர்கள் கல்வியில் சிறக்கும்போது, நம் மூத்தோர் நலமாக வாழும்போது, நம் குடும்பங்கள் வளமாக இருக்கும்போது அது ஒரு சமூகத்தின் சாதனை மட்டும் இல்லை; அது சிங்கப்பூரின் வெற்றி,” என்று துணை அமைச்சர் தினேஷ் தமது உரையில் வலியுறுத்தினார்.