பெளத்த சமயத்தைச் சேர்ந்தவர்கள் இம்முறை நேரடியாகக் கலந்துகொண்டு விசாக தினத்தைக் கொண்டாடினர். கொவிட்-19 கட்டுப்பாடுகள் முழுமையாகத் தளர்த்தப்பட்ட சூழலில் இந்தியர்கள் உட்பட மற்ற இனத்தைச் சேர்ந்த பக்தர்கள் பலரும் ரேஸ்கோர்ஸ் சாலையில் அமைந்துள்ள சாக்கியமுனி புத்தகயா ஆலயத்தில் ஒன்றுகூடினர்.
கொள்ளைநோய்ப் பரவலுக்கு முன்பிருந்ததுபோல வழிபாடுகள் மீண்டும் வழக்கநிலைக்குத் திரும்பியதோடு, காலையிலிருந்தே பக்தர்கள் ஆலயத்திற்கு வரத் தொடங்கினர்.
ஏறக்குறைய 15 மீட்டர் உயரம் கொண்ட புத்தர் சிலைமுன் மண்டியிட்டு, பக்தர்கள் பெளத்த துறவிகளின் புனிதநீர் அருளைப் பெற்றுக்கொண்டனர்.
கூட்ட நெரிசலையும் பொருட் படுத்தாமல் பல மணி நேரம் காத்திருந்த பிறகு புத்தர் சிலைக்கு நீர் ஊற்றி வழிபடுதல், விளக்கு வைப்பது போன்ற வழிபாடுகளில் பக்தர்கள் ஈடுபட்டனர்.
பல ஆண்டுகாலமாக இந்தியர்கள் வந்து வணங்கும் சிறப்பைக் கொண்டுள்ள இந்த ஆலயமானது விசாக தினத்தை முன்னிட்டு மேலும் பல இந்தியர்களை வரவேற்றது.
21 ஆண்டுகளாக இந்த ஆலயத்தில் தொண்டாற்றி வரும் 46 வயது கணேஷ் பெருமாள், "காலை ஏழு மணியிலிருந்தே இந்தியர்கள் பலர் ஆலயத்துக்கு வரத் தொடங்கிவிட்டனர். அதனைப் பார்ப்பதற்கு மிக மகிழ்ச்சியாக உள்ளது," என்று பகிர்ந்தார்.
சிறு வயதிலிருந்தே விசாக தினத்தன்றும் தனது பிறந்தநாள் அன்றும் தவறாமல் இந்த ஆலயத்திற்கு வரும் பாதுகாப்பு அதிகாரியான திரு மகேந்திரன் வீரப்பன், 65, "நான் புத்தரை மிகவும் விரும்பி வழிபடுவேன் என்றார்.
"இந்த ஆலயத்தில் இருக்கும் அதிர்ஷ்டத்தாள்மீது எனக்கு அதிக நம்பிக்கை உண்டு. இங்கு வரும் போதெல்லாம் ஆன்மிக உணர்வை என்னால் உணர முடிகிறது," என்றும் அவர் கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
நான்கு மகன்களுக்குத் தாயான இல்லத்தரசி நாகம்மாள், 43, தன் மகன்களை அழைத்துக்கொண்டு காலையிலேயே ஆலயத்திற்கு வந்திருந்தார்.
"இங்கு நான் பத்து ஆண்டுகளுக்கும் மேலாக வருகிறேன். என் தாயார் முதலில் என்னை இந்த ஆலயத் திற்கு அறிமுகப்படுத்தினார். அன்றிலிருந்து தவறாமல் ஒவ்வொரு விசாக தினத்தன்றும் வந்துவிடுவேன்," என்றார் திருவாட்டி நாகம்மாள்.
ஒவ்வொரு விசாக தினத்தன்றும் தன் குடும்பத்தோடு ஆலயத்துக்கு வரும் சிங்கப்பூர் ஆயுதப் படையில் பணிபுரியும் திருவாட்டி பாக்கியவதி ஸ்ரீனிவாசன், 63, இம்முறை தனியாக வந்திருந்தார்.
"நான் 1987லிருந்து இங்கு வந்துகொண்டிருக்கிறேன். புத்தரின் போதனைகளை நான் தீவிரமாகப் பின்பற்றி வருகிறேன். இங்கு வந்தால் என் மனத்திற்கு நிம்மதி கிடைக்கிறது," என்று கூறினார்.