சிங்கப்பூரில் செயற்கை நுண்ணறிவு ஆய்வகம் ஒன்றைத் திறக்கும் இந்திய நிறுவனம்

2 mins read
4d9908c6-1041-4d07-89ef-8afb291e834c
நவம்பர் 4ஆம் தேதியன்று ஆய்வக அறிமுக விழாவில் தகவல், மின்னிலக்க மேம்பாட்டு மூத்த துணை அமைச்சர் டான் கியட் ஹாவ் கலந்துகொண்டு பேசினார். - படம்: தகவல், மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சு

இந்தியாவின் முன்னணி மென்பொருள், தகவல் தொழில்நுட்பச் சேவை நிறுவனங்களில் ஒன்றான ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ், 2025ஆம் ஆண்டில் சிங்கப்பூரில் செயற்கை நுண்ணறிவு ஆய்வகம் ஒன்றைத் திறக்க இருப்பதாகத் தெரிவித்துள்ளது.

தென்கிழக்காசியாவில் உள்ள தனது வாடிக்கையாளர்களின் செயற்கை நுண்ணறிவுத் திட்டங்களைத் துரிதப்படுத்த தனது ஆக நவீன செயற்கை நுண்ணறிவுச் சாதனங்களை வழங்க இருப்பதாக அந்நிறுவனம் கூறியது.

இளம் திறனாளர்கள், வாழ்நாள் தொழிலை மாற்றும் தனிநபர்கள் ஆகியோருக்குச் செயற்கை நுண்ணறிவுத் திறன்களைக் கற்பிக்க நன்யாங் பலதுறைத் தொழிற்கல்லூரி மற்றும் சிங்கப்பூர் பலதுறைத் தொழிற்கல்லூரியுடன் ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ் புரிந்துணர்வுக் குறிப்புகளில் கையெழுத்திட்டுள்ளது.

செயற்கை நுண்ணறிவு ஆய்வகம் குறித்து நவம்பர் 4ஆம் தேதியன்று சிங்கப்பூரில் உள்ள மெனுலைஃப் டவரில் உள்ள ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் வட்டாரத் தலைமையகத்தில் அதன் தலைவர் ரோஷ்னி நாடார் மல்ஹோத்ரா அறிவித்தார்.

புதிய ஆய்வகத்துக்கு சிங்கப்பூர் பொருளியல் வளர்ச்சிக் கழகம் ஆதரவு வழங்குகிறது.

இதுவே ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ் நிறுவனம் திறக்கும் ஐந்தாவது செயற்கை நுண்ணறிவு ஆய்வகமாகும்.

அமெரிக்கா, பிரிட்டன், இந்தியா, ஜெர்மனி ஆகிய நாடுகளில் அந்நிறுவனம் ஏற்கெனவே செயற்கை நுண்ணறிவு ஆய்வகங்களைத் திறந்துள்ளது.

சிங்கப்பூரில் திறக்கப்படும் ஆய்வகத்திற்கு 20லிருந்து 25 அனுபவம் வாய்ந்த பொறியாளர்களும் தொழில்நுட்பர்களும் தேவைப்படுவர் என்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழிடம் திருவாட்டி மல்ஹோத்ரா தெரிவித்தார்.

நவம்பர் 4ஆம் தேதியன்று ஆய்வக அறிமுக விழாவில் தகவல், மின்னிலக்க மேம்பாட்டு மூத்த துணை அமைச்சர் டான் கியட் ஹாவ் கலந்துகொண்டு பேசினார்.

அடுத்த தலைமுறைத் திறனாளர்கள் மற்றும் ஊழியரணிக்கும் மட்டுமல்லாது இக்காலகட்டத்தில் வாழ்க்கைத் தொழிலை மாற்றுபவர்களுக்கும் ஏதுவான தொழில்நுட்பச் சூழலை கட்டியெழுப்ப சிங்கப்பூர் விரும்புவதாக அமைச்சர் டான் கூறினார்.

குறிப்புச் சொற்கள்