இந்தியா, ஞாயிற்றுக்கிழமையன்று (ஜனவரி 26) அதன் 76வது குடியரசு தினத்தைக் கொண்டாடுகிறது.
அதனையொட்டி சிங்கப்பூர் அதிபர் தர்மன் சண்முகரத்னம், பிரதமர் லாரன்ஸ் வோங் இருவரும் இந்தியாவுக்குத் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொண்டுள்ளனர்.
திரு தர்மன், இந்திய அதிபர் திரெளபதி முர்முவுக்கு வாழ்த்துக் கடிதம் அனுப்பினார். அதேபோல் பிரதமர் வோங், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்குத் தமது வாழ்த்துக் கடிதத்தை அனுப்பினார்.
தங்கள் கலாசாரம், ராணுவ ஆற்றல் ஆகியவற்றை வெளிப்படுத்தும் படைப்புகளை ஆண்டுதோறும் நடைபெறும் இந்தியக் குடியரசு தினக் கொண்டாட்டங்களில் இடம்பெறும். இவ்வாண்டு கொண்டாடட்ங்களில் இந்தோனீசிய அதிபர் பிரவோவோ சுபியாந்தோ சிறப்பு விருந்தினராகக் கலந்துகொளள்கிறார்.
கடந்த சில ஆண்டுகளில் இருநாட்டு உறவு குறிப்பிடத்தக்க அளவில் எல்லா வகையிலும் ஆழமாகியிருப்பதாக திரு தர்மன், திருமதி முர்முவுக்கு அனுப்பிய கடிதத்தில் குறிப்பிட்டார். 60 ஆண்டுகால அரசதந்திர உறவைச் சித்திரிக்கும் வண்ணம் இம்மாதம் ஒடிசாவுக்கு அதிகாரத்துவப் பயணம் மேற்கொண்ட அதிபர் தர்மன், அப்பயணம் மிகவும் ஆக்ககரமான ஒன்றாக அமைந்தது என்றும் கடிதத்தில் தெரிவித்தார்.
திரு வோங், திரு மோடிக்கு அனுப்பிய தமது கடிதத்தில் இந்தியாவின் அமோக வளர்ச்சியைப் பாராட்டினார். தற்போது உலகின் ஐந்தாவது ஆகப் பெரிய பொருளியலாக விளங்கும் இந்தியா, வரும் ஆண்டுகளில் முன்றாவது ஆகப் பெரிய பொருளியலாக உருவெடுக்கும் என்று முன்னுரைக்கப்பட்டுள்ளது.
ஆசியான் வட்டாரத்துடன் இந்தியா தொடர்ந்து தொடர்பில் இருப்பதையும் பிரதமர் வோங் வரவேற்றார். வளமாக இருப்பது மற்றும் அமைதி, நிலைத்தன்மை ஆகியவற்றின் தொடர்பில் இவ்வட்டாரத்தில் இந்தியா முக்கியப் பங்கு வகிப்பதையும் திரு வோங் சுட்டினார்.

