உயிர்மாய்ப்புக்கு முன்பே தென்படும் அறிகுறிகள்: மனநலக் கழக ஆய்வு

2 mins read
363f7094-e61b-424e-91f3-8f7f8d564aa6
தங்களின் வாழ்க்கையை முடித்துக்கொள்வோர் இறப்பதற்கு முன்பாக அவர்களது மனநிலையில் மாற்றங்கள், ஒருவித பொறுப்பற்ற போக்கு, கோபம் ஆகியன வெளிப்பட்டுள்ளதாக அறியப்படுகிறது. - படம்: ஸ்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூர் மனநலக் கழகம் 2021 முதல் 2024 வரை நடத்திய ஆய்வில் ஒருவர் தனது உயிரை மாய்த்துக்கொள்வதற்கு முன்பாக சில அறிகுறிகள் தென்படுகின்றன என்று கண்டறியப்பட்டுள்ளது.

அவ்வாறு தங்களின் வாழ்க்கையை முடித்துக்கொள்வோர் இறப்பதற்கு முன்பு மனநிலையில் மாற்றங்கள், ஒருவித பொறுப்பற்ற போக்கு, கோபம் ஆகியன வெளிப்பட்டுள்ளதாக அறியப்பட்டுள்ளது. மேலும் அவர்களின் குடும்பங்களில் மனநோயால் பாதிக்கப்பட்டவர்கள் இருந்ததற்கான வரலாறும், தூக்கமின்மையும் உயிர்மாய்ப்புக்குக் காரணங்களாக உள்ளன.

உயிரை மாய்த்துக்கொள்வோர் இறப்பதற்கு முன்பாக ஏற்கெனவே உயிர்மாய்ப்பு முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதும் சமூக ஊடகங்களில் விநோதமான பதிவுகளைச் செய்துள்ளதும் ஆய்வில் தெரியவந்துள்ளது.

ஆய்வுகளின் அடிப்படையில், குடும்ப உறுப்பினர்களும் நண்பர்களும் சமுதாயமும் மனநல ஆரோக்கியம் குறித்து அதிக விழிப்புணர்வை ஏற்படுத்திக்கொள்வது அவசியம் என்று மனநலக் கழகம் தெரிவித்துள்ளது. அதன் பயனால், பாதிப்படைந்தோர் வெளிப்படுத்தும் அறிகுறிகளை ஆரம்பத்திலேயே கண்டறிந்து உரிய தடுப்பு நடவடிக்கைகளை எடுக்கமுடியும்.

“பதில்களைத் தேடி” (சீக்கிங் அன்ஸ்சர்ஸ்) : “இடருக்கான காரணங்களை ஆராய்ந்து, பகுப்பாய்வு செய்யும் உளவியல் பரிசோதனை” என்ற தலைப்பில் நடந்த ஆய்வுமுறை சிங்கப்பூரில் உளவியல் ரீதியில் உயிர்மாய்ப்பைத் தடுப்பதற்கு மேற்கொள்ளப்படுகின்ற முதல் முயற்சியாகும்.

உயிரை மாய்த்துக்கொண்டவரின் குடும்பம், உற்ற நண்பர்கள், பராமரிப்பாளர் ஆகியோரிடம் உரையாடி, மறைந்தவரின் ஆழமான மனநிலையை ஆய்வு செய்வதே இந்த உளவியல் பரிசோதனையின் இலக்கு.

சிங்கப்பூரில் நடந்துள்ள உயிர்மாய்ப்புகள் பற்றிய அந்த ஆய்வில் பல முக்கியக் கூறுகள் அடையாளம் காணப்பட்டன. இறந்தோரின் தனிப்பட்ட சூழ்நிலை, குணம், சுகாதாரம் ஆகியவற்றை அறிந்துகொள்ளுதல் உயிர்மாய்ப்புக்கான காரணத்துக்கு இட்டுச் செல்ல வாய்ப்புள்ளது. அவற்றைக்கொண்டு, அன்புக்குரியோர் அபாயங்களை அறிந்துகொண்டு, உடனடி உதவிகளை வழங்கலாம்.

ஆய்வாளர்கள் உயிரை மாய்த்துக்கொண்ட 73 நபர்களின் நெருக்கமானோரிடம் நேர்காணல்கள் செய்தனர்.

குறிப்புச் சொற்கள்