கடைகளிலிருந்து திருடியதாகத் திங்கட்கிழமையன்றும் (ஜூன் 9) செவ்வாய்க்கிழமையன்றும் 15 பேர்மீது குற்றம் சுமத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த 15 பேரும் 20 வயதுக்கும் 74 வயதுக்கும் இடைப்பட்டவர்கள்.
பதிவான ஏழு வழக்குகளில் ஐந்து கோல்ட் ஸ்டோரேஜ், என்டியுசி ஃபேர்பிரைஸ், ஷெங் சியாங் போன்ற முன்னணிப் பேரங்காடிகளில் நிகழ்ந்த திருட்டுகளுடன் தொடர்புடையவை.
கடந்த மே மாதம் 7ஆம் தேதியன்று கம்பஸ் ஒன் கடைத்தொகுதியில் உள்ள கோல்ட் ஸ்டோரேஜ் பேரங்காடியில் 46 வயது பெண் ஒருவரை பாதுகாவல் அதிகாரி ஒருவர் தடுத்து வைத்தார்.
சில மளிகைப் பொருள்களை எடுத்துக்கொண்டு அவர் பணம் செலுத்தாமல் அங்கிருந்து வெளியேற முயன்றதாகக் கூறப்படுகிறது. அவர் திருடிய பொருள்களின் மதிப்பு ஏறத்தாழ $202. காவல்துறையினர் அப்பெண்ணைக் கைது செய்தனர்.
மார்ச் மாதம் 23ஆம் தேதியன்று கிரேட் வோர்ல்ட் சிட்டியில் உள்ள கோல்ட் ஸ்டோரேஜ் பேரங்காடியிலிருந்து $80 பெறுமானமுள்ள உணவுப் பொருள்களைத் திருட முயன்றதற்காக 54 வயது ஆடவர் கைது செய்யப்பட்டார்.
இன்னொரு வழக்கில், ஜனவரி 24ஆம் தேதியன்று காஸ்வே பாயின்ட் கடைத்தொகுதியில் உள்ள சேலஞ்சர் கடையிலிருந்து மூன்று செவிப்பொறிகளைத் (earbuds) திருடியதாகக் கூறப்படும் 58 வயது ஆடவர் கைது செய்யப்பட்டார். அவர் திருடிய பொருள்களின் மதிப்பு கிட்டத்தட்ட $687.
2024ஆம் ஆண்டில் நிகழ்ந்த திருட்டு தொடர்பாக 62 மற்றும் 32 வயது பெண்கள் இருவர் மீது குற்றம் சுமத்தப்படும்.
தொடர்புடைய செய்திகள்
அந்த 62 வயது பெண், ஈசூனில் உள்ள ஷெங் சியோங் பேரங்காடியில் 2024ஆம் ஆண்டு நவம்பர் 3, 9ஆம் தேதிகளில் சளிக்காய்ச்சல் மாத்திரைகளைத் திருடியதாக நம்பப்படுகிறது.
குற்றம் சுமத்தப்பட இருக்கும் 32 வயதுp பெண், விவோசிட்டி கடைத்தொகுதியில் உள்ள ஸாரா துணிக் கடையில் ஏறத்தாழ $581 பெறுமானமுள்ள துணிகளைத் திருடியதாகக் கூறப்படுகிறது.
இக்குற்றச் செயலை அவர் 2024ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 9ஆம் தேதியன்று புரிந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
அதே நாளன்று அவர் 100 AM கடைத்தொகுதியில் உள்ள முஜி கடையில் $881 பெறுமானமுள்ள பொருள்களைத் திருடியதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.