தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஸ்கூட் விமானத்தில் திருடியதாகக் குற்றச்சாட்டு; ஆடவர் மறுப்பு

1 mins read
9445d2e5-d45f-4928-b34e-ec38bcf9797a
திங்கட்கிழமை (மார்ச் 17) கோலாலம்பூரிலிருந்து சிங்கப்பூருக்குச் சென்றுகொண்டிருந்த விமானத்தில் சீன நாட்டவரான 51 வயது சாங் குன் திருடியதாகக் குற்றம் சாட்டப்பட்டது. - படம்: பெரித்தா ஹரியான்

ஸ்கூட் விமானத்தில் பயணம் செய்துகொண்டிருந்தபோது இன்னொரு பயணியிடமிருந்து கடன் அட்டை ஒன்றையும் $200க்கும் அதிகமான ரொக்கத்தையும் திருடியதாக ஆடவர் ஒருவர் மீது செவ்வாய்க்கிழமை (மார்ச் 18) குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.

திங்கட்கிழமை (மார்ச் 17) கோலாலம்பூரிலிருந்து சிங்கப்பூருக்குச் சென்றுகொண்டிருந்த விமானத்தில் சீன நாட்டவரான 51 வயது சாங் குன் திருடியதாகக் குற்றம் சாட்டப்பட்டது.

தம்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை சாங், செவ்வாய்க்கிழமை (மார்ச் 18) மறுத்தார்.

இந்த வழக்கிற்கு முந்தைய கலந்துரையாடல் மார்ச் 27ல் நடைபெறும்.

பாதிக்கப்பட்ட பயணி அவரது இருக்கையில் இல்லாதபோது, இருக்கைக்கு மேல் உள்ள பெட்டிகள் வைக்குமிடத்திலிருந்து பை ஒன்றை சாங் எடுத்ததாகக் கூறப்படுகிறது.

பையைத் திறந்து பார்த்து அதில் உள்ள சில பொருள்களைத் திருடிவிட்டு அதை மீண்டும் எடுத்த இடத்திலேயே அவர் வைத்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

அதை நேரில் பார்த்ததாகக் கூறப்படும் ஒருவர் பையின் உரிமையாளரிடம் அதுகுறித்து தெரிவித்ததாக நம்பப்படுகிறது.

பையைத் திறந்து பார்த்தபோது அதில் இருந்த ரொக்கத்தையும் கடன் அட்டையையும் காணவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.

சம்பவத்தை நேரில் கண்டவரின் வர்ணனையை வைத்து சாங்கைப் பாதிக்கப்பட்ட பயணி தேடினார்.

காவல்துறையிடம் தகவல் அளிக்கப்பட்டது.

சாங்கி விமான நிலையத்தில் பயணிகளுக்கான இடத்தில் சாங்கைப் பாதிக்கப்பட்ட பயணி கண்டுபிடித்தார்.

அதையடுத்து, சாங்கைக் காவல்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.

குறிப்புச் சொற்கள்