முன்னாள் மெண்டாக்கி மேலாளர் லஞ்சமாக மடிக்கணினி பெற முயன்றதாக குற்றச்சாட்டு

1 mins read
aa4b5350-9e19-4231-bc83-a607df36892b
திரு ஸுல்கிஃப்லி காதர், வயது 51, 2023ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்திற்கும் மே மாதத்திற்கும் இடைப்பட்ட காலத்தில் மூன்று சந்தர்ப்பங்களில் குற்றம் புரிந்ததாகக் கூறப்படுகிறது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

மெண்டாக்கியில் மின்னிலக்கத் தகவல் தொழில்நுட்ப மேலாளராகப் பணிபுரிந்த மலேசியரான ஸுல்கிஃப்லி காதர், வயது 51, $1,000 பெறுமானமுள்ள மடிக்கணினியை தகவல், தொழில்நுட்ப நிறுவன ஊழியரிடமிருந்து லஞ்சமாகப் பெற முயன்றதாகக் குற்றம் சட்டப்பட்டுள்ளது.

மெண்டாக்கி எனப்படும் மலாய்/முஸ்லிம் சுய உதவி அமைப்பில் அவர் தற்பொழுது பணியில் இல்லை என்று கூறப்படும் நிலையில், 2023ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்திற்கும் மே மாதத்திற்கும் இடைப்பட்ட காலத்தில் மூன்று சந்தர்ப்பங்களில் குற்றம் புரிந்ததாகக் கூறப்படுகிறது.

இதுபற்றிய அறிக்கை ஒன்றில் ஊழல், லஞ்ச ஒழிப்புத் துறை, மெண்டாக்கி பணி தொடர்பான ஒரு ஒப்பந்தப்புள்ளியை ’ஏஸ்பீட்’ என்ற நிறுவனத்துக்கு வழங்க வெகுமதியாக மடிக்கணினியைப் பெற ஸுல்கிஃப்லி மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளதாகத் தெரிவித்தது.

இதைத் தொடர்ந்து செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 4ஆம் தேதி) ஸுல்கிஃப்லி மீது லஞ்சம் பெற முயன்றதாக ஒரு குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.

இதில் வழக்குக்கு முந்தைய கலந்துரையாடல் மார்ச் 5ஆம் தேதி இடம்பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸுல்கிஃப்லி மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவருக்கு 10 ஆண்டுகள் வரையிலான சிறைத் தண்டனையும் $20,000 வரையிலான அபராதமும் விதிக்கப்படலாம்.

குறிப்புச் சொற்கள்