தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

25 நோயாளிகளின் மார்பகங்களைப் படமெடுத்ததாக தேசிய பல் நிலைய முன்னாள் ஊழியர்மீது குற்றச்சாட்டு

2 mins read
dd997027-8421-4be0-b4d6-d0341758da4b
எல்ஜின் இங்கின் வழக்கு ஜூலை 8க்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. - படம்: பிக்சாபே

சிங்கப்பூர் தேசிய பல் நிலையத்தின் முன்னாள் ஊழியர், 25 நோயாளிகளின் மார்பகங்களைப் படமெடுத்ததாகக் கூறப்படுவது தொடர்பில் அவர்மீது மாவட்ட நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

எல்ஜின் இங், 28, மீது வெள்ளிக்கிழமை (ஜூன் 13) 30 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. அவற்றில் 25 குற்றச்சாட்டுகள், பிறரது உறுப்புகளை ரகசியமாகப் படமெடுத்தது தொடர்பானவை.

2022 மார்ச் வரை 2024 ஏப்ரல் வரையிலான ஈராண்டு காலத்தில், பாதிக்கப்பட்டவர்களின் மார்பகங்களை ‘மேலிருந்து கீழும்’ ‘கீழிருந்து மேலும்’ வேண்டுமென்றே படமெடுத்ததாக இங்மீது குற்றஞ்சாட்டப்படுகிறது.

இந்தக் குற்றங்களை அவர் எவ்வாறு புரிந்தார் என்பது குறித்து விவரங்கள் நீதிமன்ற ஆவணங்களில் இடம்பெறவில்லை. நீதிமன்ற உத்தரவு காரணமாக, இதில் சம்பந்தப்பட்ட பெண்களின் அடையாளங்கள் வெளியிடப்படவில்லை.

2022லும் 2023லும் சிங்கப்பூர் தேசிய பல் நிலையத்துக்குச் சொந்தமான கணினியிலிருந்து 42 நோயாளிகளின் புகைப்படங்களை இங் பதிவிறக்கம் செய்ததாகவும் கூறப்படுகிறது.

மின்னணுப் பல் பதிவேடுகளிலிருந்து 18 நோயாளிகளின் தனிப்பட்ட விவரங்களை இங் பெற்றதாகவும் இரு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.

மேலும், ரகசியமாக எடுக்கப்பட்ட படங்களை 2024 மே, ஜூன் மாதங்களில் குறைந்தது இரு தருணங்களில் ஆடவர் ஒருவருக்கு அனுப்பி வைத்ததாக இங்மீது குற்றஞ்சாட்டப்படுகிறது.

இந்நிலையில், ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சின் கேள்விகளுக்குப் பதிலளித்த சிங்கப்பூர் தேசிய பல் நிலையம், இங் தற்போது அங்கு பணிபுரியவில்லை என்றது.

“இச்சம்பவம் சிங்கப்பூர் தேசிய பல் நிலையத்தின் கவனத்துக்குக் கொண்டு வரப்பட்டபோது, நாங்கள் இதுகுறித்து முழுமையாக விசாரணை நடத்தி காவல்துறையிடம் புகார் அளித்தோம்,” என்று பல் நிலையப் பேச்சாளர் கூறினார்.

“எங்கள் நோயாளிகளின் பாதுகாப்பையும் அவர்களின் தனிப்பட்ட தரவுகள் பாதுகாப்பாக இருப்பதையும் உறுதிசெய்வது எங்களது தலையாய முன்னுரிமை,” என்றும் அவர் சொன்னார்.

தமது குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொள்வது குறித்து இங் இன்னும் பதில் சொல்லவில்லை. அவரது வழக்கு ஜூலை 8க்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்