அரசாங்கம் வழங்கிய கொவிட்-19 சலுகைகளைத் தவறான முறையில் பயன்படுத்திய சந்தேகத்தில் 45 வயது ஆடவர் மீது வியாழக்கிழமை (மார்ச் 20) குற்றஞ்சாட்டப்படவுள்ளது.
இரண்டு ஊழியர்களின் ஊதியத்தைப் பொய்யாக அதிகரித்து போலியான சம்பளச் சீட்டுகளைக் கொடுத்து ஆடவர் சலுகைகளைப் பெற்றதாகக் கூறப்படுகிறது.
ஆடவர் சிங்கப்பூர் உள்நாட்டு வருவாய் ஆணையத்தை வேலை ஆதரவுத் திட்டத்தின் கீழ் 5,150 வெள்ளி மோசடி செய்ததாக நீதிமன்ற ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன. இச்சம்பவம் 2020ஆம் ஆண்டு மே மாதத்திற்கும் நவம்பர் மாதத்திற்கும் இடையில் நடந்தது.
ஆடவர் மேலும் நான்கு ஊழியர்களின் ஊதியத்தை அதிகப்படுத்தி அதன்வழி மேலும் 33,719 வெள்ளியை ஆணையத்திடம் பெறமுயன்றார். ஆனால் அதை அதிகாரிகள் அனுமதிக்கவில்லை.
மேல்விவரங்கள் கேட்டபோது அவர் போலியான தகவல்களை வழங்கியுள்ளார். அதைத் தொடர்ந்து காவல்துறை விசாரணையைத் தொடங்கியது.
ஆடவர் மீது மோசடிக் குற்றச்சாட்டுகள் சுமத்தப்படும் என்று காவல்துறை தெரிவித்தது.