சிங்கப்பூர் நோக்கி பறந்துகொண்டிருந்த விமானத்தில் விமானச் சிப்பந்தி ஒருவரிடம் தமது ஆண் உறுப்பைக் காட்டியதாக 23 வயது ஆடவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்தோனீசியரான பிரில்லியன்ட் அங்ஜெயா, இவ்வாண்டு ஜனவரி மாதம் 23ஆம் தேதியன்று இக்குற்றத்தைப் புரிந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
அங்ஜெயா, போர்வையால் தம்மைப் போர்த்திக்கொண்டு தமது கைப்பேசி மூலம் காணொளி எடுத்துக்கொண்டே விமானப் பணிப்பெண்ணிடம் தமது ஆண் உறுப்பைக் காட்டியதாகக் கூறப்படுகிறது.
அப்போது அந்த விமானப் பணிப்பெண் அவருக்கு உணவு பரிமாறிக்கொண்டிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
அங்ஜெயா முறையற்ற வகையில் நடந்துகொண்டதும் அந்த விமானப் பணிப்பெண் உடனடி அந்த இடத்தைவிட்டுச் சென்று தமது மேற்பார்வையாளரிடம் புகார் அளித்தார்.
விமானம் சாங்கி விமான நிலையத்தில் தரையிறங்கியதும் அங்ஜெயாவை விமான நிலையக் காவல்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.
விசாரணைக்காக அவரது கைப்பேசி பறிமுதல் செய்யப்பட்டது.
இதையடுத்து, அங்ஜெயா புதன்கிழமை (மார்ச் 12) நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
தொடர்புடைய செய்திகள்
வழக்கறிஞர் யாரையும் நியமிக்கவில்லை.
தமது செயலுக்கு வருந்துவதாகக் கூறிய அங்ஜெயா, அதற்கு மன்னிப்பு கேட்டுக்கொண்டார்.
தாம் சிங்கப்பூரில் கடந்த ஒன்றரை மாதங்களாக இருப்பதால் வழக்கை விரைவுபடுத்துமாறு அவர் நீதிமன்றத்தைக் கேட்டுக்கொண்டார்.
இதற்குப் பதிலளித்த நீதிபதி கமலா பொன்னம்பலம், இந்த வழக்கு தொடர்பாக அரசாங்க வழக்கறிஞர்களுக்குக் கூடுதல் நேரம் தேவைப்படுவதாகத் தெரிவித்தார்.
வழக்கை மூன்று வாரங்களுக்கு ஒத்திவைக்கும்படி அவர்கள் கேட்டுக்கொண்டதை நீதிபதி சுட்டினார்.
சிங்கப்பூரிலிருந்து வேறொரு நாட்டுக்குச் செல்லத் திட்டமிருந்ததாக அங்ஜெயா தெரிவித்தார்.
அவர் தொடர்பான வழக்கு மார்ச் 24ஆம் தேதியன்று மீண்டும் நீதிமன்றத்தில் விசாரிக்கப்படும்.
குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு அதிகபட்சம் ஓராண்டு சிறைத் தண்டனை, அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

