ஹவ்காங்கில் தமது இளைய மகனுடன் சென்ற ஆடவரைத் தாக்கியதாகச் சந்தேகிக்கப்படும் நிர்வாண ஆடவர்மீது ஆபத்தான ஆயுதங்களைப் பயன்படுத்தி வேண்டுமென்றே காயம் ஏற்படுத்தியதாகச் சனிக்கிழமையன்று (ஏப்ரல் 19) குற்றம் சாட்டப்பட்டது.
ஏப்ரல் 17ஆம் தேதி பிற்பகல் 1 மணியளவில் ஹவ்காங் அவென்யூ 8ல் உள்ள புளோக் 676க்கும் 677க்கும் இடைப்பட்ட திறந்தவெளி கார் நிறுத்துமிடத்தில் 30 வயது காளிதாசன் கோவிந்தராகியை ஆர். நதிபன் கத்தியால் வெட்டியதாகக் கூறப்பட்டது.
நதிபனை மருத்துவ பரிசோதனைக்காக மனநலக் கழகத்தில் தடுப்புக் காவலில் வைக்க உத்தரவிடப்பட்டது.
அவ்வழக்கு மே 2ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டது.
சம்பவத்தன்று நதிபன் நிர்வாணமாக இருந்ததையும் அவர் தாக்குதலில் ஈடுபட்டதையும் அவ்வட்டாரவாசிகள் பலர் கண்டனர்.
தாக்குதலின்போது கையில் காயமடைந்த காளிதாசன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
கூர்மையான ஆணிகள் இருந்த மரப்பலகையால் பேருந்து ஒன்றைச் சேதப்படுத்துவதற்குமுன் கார் நிறுத்துமிடத்திலிருந்த வாகனத்தையும் நதிபன் சிதைத்ததாகக் கூறப்பட்டது.
அவரைக் கைதுசெய்ய காவல்துறை அதிகாரிகள் முற்பட்டபோது அவர்களையும் மரப்பலகையைக் கொண்டு நதிபன் தாக்கியதால் அதிகாரிகள் மூவருக்கு லேசான காயங்கள் ஏற்பட்டதாகச் சொல்லப்பட்டது.