சிங்கப்பூர் நீர்ப்பகுதிக்குள் உரிய ஆவணங்களின்றி சட்டவிரோதமாக நுழைந்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்ட நான்கு இந்தோனீசிய ஆடவர்களிடம் 2,700 பொட்டலங்களிலிருந்த கள்ள சிகரெட்டுகள் கண்டெடுக்கப்பட்டன.
ரிப்பான், 28, மஹ்யுடின், 32, அஸ்மின் அலெக்சாண்டர், 50, ரிட்வான் அகரின், 50 ஆகிய நால்வர்மீது திங்கட்கிழமை (மே 19) உரிய அனுமதியின்றி சிங்கப்பூருக்குள் நுழைந்த குற்றம் சுமத்தப்பட்டது.
புலாவ் தெக்கோங் அருகே மே 17ஆம் தேதி நள்ளிரவுக்குப் பின் 1.30 மணியளவில் சிறிய படகில் ஆடவர்களைக் கடலோரக் காவற்படை கண்டுபிடித்ததாகக் காவல்துறையும் குடிநுழைவுச் சோதனைச் சாவடிகள் ஆணையமும் மே 18ஆம் தேதி கூட்டறிக்கை வெளியிட்டன.
அதையடுத்து கடலோரக் காவற்படை அதிகாரிகள் உள்பட பல பிரிவுகளைச் சேர்ந்த அதிகாரிகள் ஆடவர்களைக் கைது செய்தனர்.
“புலாவ் தெக்கோங்கிற்கு வெளியே பிடிப்பட்ட ஆடவர்களிடம் பயண ஆவணங்கள் இல்லை. அவர்களிடம் சட்டவிரோத பொருள்களும் இருந்தன,” என்று காவல்துறை பேச்சாளர் தெரிவித்தார்.
மொத்தம் 2,700 பொட்டலங்கள் தீர்வைச் செலுத்தப்படாத கள்ள சிகரெட்டுகளும் ‘ஃபைபர்கிளாஸ்’ படகும் அவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டது.
சிங்கப்பூருக்குள் சட்டவிரோதமாக நுழைவோருக்கு அதிகபட்சம் ஆறு மாதச் சிறைத் தண்டனையும் குறைந்தது மூன்று பிரம்படிகளும் விதிக்கப்படக்கூடும்.

