மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு விசாரணை அதிகாரியாகப் பணிபுரிந்த முகம்மது ஃபயாஸ் ஹெல்மி, 29, வெவ்வேறு தருணங்களில் மூன்று ஆடவர்களிடமிருந்து மொத்தம் கிட்டத்தட்ட $1,400 ரொக்கத்தை கையாடியதாகக் கூறப்படுகிறது.
போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு வேலையில் தற்பொழுது இல்லாத அவர் மீது நம்பிக்கை மோசடி தொடர்பில் மூன்று குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
நீதித்துறை செயல்பாட்டைத் தடுக்கும் நோக்கத்துடன் செயல்பட்டது, ஏமாற்றும் நோக்கத்துடன் மோசடி செய்தது என ஃபயாஸ் மீது தலா இரண்டு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.
2019க்கும் 2024க்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் அவர் அக்குற்றங்களைப் புரிந்ததாகக் கூறப்படுகிறது.
ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சின் கேள்விகளுக்குப் பதிலளித்த போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு, 2024 மே மாதம் ஃபயாஸ் பணியிலிருந்து விலகியதாகத் தெரிவித்தது.
“முன்னதாக 2024ல், எங்களுக்குக் கிடைத்த புகாரின் பேரில் செயல்பட்ட நாங்கள், அதிகாரி ஒருவர் ரொக்கப் பணத்தைக் கையாடியதை இரண்டு விசாரணைகளில் கண்டுபிடித்தோம். உடனடியாக இந்த விவகாரத்தை விசாரணைக்காக சிங்கப்பூர் காவல்துறையிடம் ஒப்படைத்தோம்,” என போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு செய்தித் தொடர்பாளர் கூறினார்.
“மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் விசாரணையில், இரண்டு சந்தர்ப்பங்களில் அந்த அதிகாரி, புலனாய்வின்போது கைப்பற்றப்பட்ட பணத்தையும் தனிப்பட்ட சொத்துகளையும் திருப்பித் தரத் தவறியதாகவும் வழக்குகள் முடிவடைந்த பின்னர் அவற்றின் உரிமையாளர்களுக்கு அவை திருப்பித் தரப்பட வேண்டியவை என்றும் தெரியவந்தது,” என்று அச்செய்தித் தொடர்பாளர் மேலும் கூறினார்.
அவ்விரு வழக்குகளையும் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு உடனடியாக காவல்துறையிடம் ஒப்படைத்ததாக அவர் தெரிவித்தார்.
தொடர்புடைய செய்திகள்
ஃபயாசின் வழக்கு பிப்ரவரி 21ஆம் தேதி மீண்டும் நீதிமன்றத்தில் விசாரிக்கப்படும்.

