தீவு விரைவுச் சாலையில் மணிக்கு 132 கிலோமீட்டர் வேகத்தில் சென்றதாக நம்பப்படும் 43 வயது வேன் ஓட்டுநர்மீது நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (ஜூன் 17) குற்றஞ்சாட்டப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஏப்ரல் 13ஆம் தேதி அனுமதிக்கப்பட்ட 60 கிலோமீட்டர் வேகத்தைவிட கூடுதல் வேகத்தில் வாகனத்தை ஆடவர் ஓட்டியதாகக் கூறப்படுகிறது.
வேகக் கட்டுப்பாட்டை மீறியதற்காக ஆடவருடன் சேர்த்து 7 வாகனமோட்டிகள்மீது நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படும் என்று ஜூன் 16ஆம் தேதி காவல்துறை குறிப்பிட்டது.
எட்டு வாகனமோட்டிகளும் அனுமதிக்கப்பட்ட வேகத்தைவிட மணிக்கு 40 கிலோமீட்டர் வேகத்தில் ஓட்டியதாகக் கூறப்பட்டது.
56 வயது ஆடவர் ஷியர்ஸ் அவென்யூவில் மார்ச் 30ஆம் தேதி மணிக்கு 120 கிலோமீட்டர் வேகத்தில் காரை ஓட்டியதாகக் கூறப்படுகிறது. அது அனுமதிக்கப்பட்டதைவிட இரண்டு மடங்கு அதிகம்.
குற்றம் புரிந்ததாக சந்தேகிக்கப்படுவோரில் எட்டில் ஏழு பேர் இவ்வாண்டு மார்ச் மாதத்திலிருந்து ஏப்ரல் மாதம் வரை வேகக் கட்டுபாட்டை மீறியதாக நம்பப்படுகிறது. அவர்களில் ஒருவர் கடந்த ஆண்டு டிசம்பர் 28ஆம் தேதி வாகனத்தை வேகமாக ஓட்டியதாகக் கூறப்படுகிறது.
வேகக் கட்டுப்பாட்டை மீறுவோருக்கு $1,000 அபராதம், மூன்று மாதம் வரையிலான சிறைத் தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.
மீண்டும் குற்றம் புரிவோருக்கு $2,000 அபராதம், அதிகபட்சம் ஆறு மாதம் சிறைத் தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம். அவர்களின் வாகன உரிமங்களும் ரத்து செய்யப்படலாம்.
தொடர்புடைய செய்திகள்
அதிவேகமாக வாகனத்தை ஓட்டுவது பெரும்பாலான சாலை விபத்துகளுக்குக் காரணமாக உள்ளது. கடந்த ஆண்டு சாலை விபத்துகளில் மாண்டோர், காயமடைந்தோர் எண்ணிக்கை ஐந்தாண்டு காணாத அளவில் உயர்ந்தது.
அடுத்த ஆண்டு ஜனவரி 1 முதல் வேகக் கட்டுப்பாட்டை மீறுவோருக்கு இன்னும் கடுமையான தண்டனைகள் விதிக்கப்படும்.