2021க்கும் 2023க்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் தாம் விசாரித்த வழக்குகளுடன் தொடர்புடைய வாக்குமூலங்களையும் ஆவணங்களையும் போலியாகத் தயாரித்ததாக காவல்துறை அதிகாரி ஒருவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
எஸ்.விக்னேஷ்வரன் சுப்பிரமணியம் என்னும் அந்த அதிகாரி மீது போலி ஆவணங்கள் தொடர்பாக புதன்கிழமை (மே 21) 9 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. அவர் பணியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
பணியில் தமது செயல்பாடு காரணமாக விக்னேஷ்வரன், 35, கூடுதல் கண்காணிப்பில் வைக்கப்பட்டு அவரது வழக்குகள் மறுஆய்வு செய்யப்பட்டதைத் தொடர்ந்து 2023 ஜனவரியில் குற்றங்கள் வெளிச்சத்துக்கு வந்தன.
விக்னேஷ்வரன் புரிந்ததாகக் கூறப்படும் குற்றங்கள் ஏழு வழக்குகளுடன் தொடர்புடையவை. அவற்றில் ஐந்து வழக்குகள், அப்போது நடந்துகொண்டிருந்த குற்றவியல் வழக்குகளாகும். நடந்து முடிந்த எஞ்சிய இரண்டு வழக்குகள், நீதிமன்றத்தில் வழக்காகத் தொடுக்கப்படவில்லை என்று காவல்துறைப் பேச்சாளர் ஒருவர் கூறினார்.
விக்னேஷ்வரனின் பதவி, அவர் கையாண்ட வழக்குகள் குறித்த இதர விவரங்கள் வெளியிடப்படவில்லை.
“தவற்றைச் சரிசெய்யும் நடவடிக்கைகள் பின்னர் எடுக்கப்பட்டன. புதிதாக நியமிக்கப்பட்ட விசாரணை அதிகாரிகளால் தேவையான வாக்குமூலங்களை முறையாகப் பதிவுசெய்வது உள்ளிட்டவை அவற்றில் அடங்கும்,” என்றார் அந்தப் பேச்சாளர்.
அதனைத் தொடர்ந்து, வழக்குகளை மறுமதிப்பீடு செய்த பின்னர், நீதிக்கு தவறிழைக்கப்படவில்லை என்பதைத் தலைமைச் சட்ட அதிகாரி அலுவலகம் தீர்மானித்தது.
ஏழு வழக்குகளுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் குற்றங்களைத் தவிர, வேறெந்தத் தவறுகளும் கண்டுபிடிக்கப்படவில்லை என்று காவல்துறை கூறியது. விக்னேஷ்வரன் கூடுதல் கண்காணிப்பில் இருந்தபோது காட்சிப் பொருள்கள், ஆவண மேலாண்மை தொடர்பில் அவர் கையாண்ட வழக்குகளில் காவல்துறை முறைகேடுகளைக் கண்டறிந்தது.
தொடர்புடைய செய்திகள்
ஏழு வழக்குகளில் ஏழு காவல்துறை வாக்குமூலங்கள், இரண்டு ஒப்புதல் சீட்டுகள் என ஒன்பது ஆவணங்களை விக்னேஷ்வரன் போலியாக தயாரித்ததாகக் கூறப்படுவது பின்னர் தெரியவந்தது. வழக்கு ஜூன் 18ஆம் தேதி நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வரும்.

