தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சாலையில் மோதிவிட்டு நிறுத்தாமல் சென்றதாக அறுவர் மீது குற்றச்சாட்டு

1 mins read
50ee2603-acd9-40f7-a90b-c8b47319b707
குற்றம் சாட்டப்பட இருப்பவர்களில் ஒருவர் சிராங்கூன் சாலையில் வாகனம் ஓட்டிக்கொண்டிருந்தபோது சாலையோர விளக்குக் கம்பம் மீது மோதியதாகக் கூறப்படுகிறது. அவர் வாகனத்தை நிறுத்தாமல் அங்கிருந்து கிளம்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது. - படம்: சிங்கப்பூர் காவல்துறை

சிங்கப்பூர் சாலைகளில் பிறர் மீது வாகனத்தை மோதிவிட்டு நிறுத்தாமல் சென்றதாக ஆறு பேர் மீது புதன்கிழமை (மே 21) குற்றம் சாட்டப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தக் குற்றங்கள் 2024ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்துக்கும் 2025ஆம் ஆண்டு ஜனவரி மாதத்துக்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் நிகழ்ந்ததாக காவல்துறை தெரிவித்தது.

குற்றம் சாட்டப்பட இருப்போரில் 79 வயது ஆடவரும் ஒருவர்.

2024ஆம் ஆண்டு ஆகஸ்ட் 6ஆம் தேதியன்று ஸ்பிரிங்சைட் டிரைவ் வழியாக அவர் கார் ஓட்டிச் சென்றபோது மோட்டார் சைக்கிள் மீது மோதியதாகக் கூறப்படுகிறது.

இதில் அந்த மோட்டார் சைக்கிளோட்டிக்கு மிகக் கடுமையான காயங்கள் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

மோட்டார் சைக்கிளோட்டிக்கு உதவி செய்யாமல் அவர் அங்கிருந்து கிளம்பிச் சென்றதாகக் காவல்துறை கூறியது.

குற்றம் சாட்டப்பட இருக்கும் மற்றவர்களில் நான்கு ஆடவர்களும் ஒரு பெண்ணும் அடங்குவர்.

அவர்களில் 30 வயது ஆடவர் ஒன்பது குற்றச்சாட்டுகளை எதிர்நோக்குகிறார்.

ஜனவரி 2ஆம் தேதியன்று அவர் கிராஞ்சி விரைவுச்சாலையில் வேன் ஓட்டிச் சென்றுகொண்டிருந்தபோது கார், டாக்சி, இன்னொரு வேன் ஆகியவை மீது மோதியதாகத் தெரிவிக்கப்பட்டது.

விபத்துடன் தொடர்புடையவர்கள் தங்கள் வாகனங்களை நிறுத்திவிட்டு பாதிப்படைந்தோருக்கு உதவ வேண்டும் என்று காவல்துறை வலியுறுத்தியுள்ளது.

தேவைப்பட்டால் ஆம்புலன்சை அழைக்க வேண்டும்.

விபத்து காரணமாக அரசாங்கத்துக்குச் சொந்தமான சொத்துகள் சேதமடைந்தால் காவல்துறையிடம் உடனடியாகத் தெரிவிக்க வேண்டும்.

குறிப்புச் சொற்கள்