பென்சில்வேனியா: அமெரிக்காவில் யுனைடெட் ஹெல்த் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பிரயன் தாம்சன் என்பவரை கொன்றதாக சந்தேகிக்கப்படும் நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவர் மீது திங்கட்கிழமை (டிசம்பர் 9ஆம் தேதி) கொலைக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. திரு பிரயன் தாம்சன் கொலையைத் தொடர்ந்து சந்தேக நபரை ஐந்து நாள்களாக காவல்துறையினர் தேடி வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சந்தேக நபரை காவல்துறை லுய்கி மென்கியோன் என அடையாளம் கண்டுள்ளது. அவருக்கு வயது 26 என்று கூறப்படுகிறது. அவரைக் காவல் துறையினர் பென்சில்வேனியா மாநிலத்தில் அல்டூனா என்ற பகுதியில் கைது செய்தனர். சந்தேக நபர் மெக்டோனல்ட்ஸ் உணவகத்தில் சாப்பிட்டுக் கொண்டிருந்ததைப் பார்த்த வாடிக்கையாளர்களில் ஒருவர் அவர் சந்தேக நபர் போல் இருந்ததால் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தார். அதைத் தொடர்ந்து சந்தேக நபர் கைது செய்யப்பட்டார் என்று அதிகாரிகள் செய்தியாளர் மாநாட்டில் தெரிவித்தனர்.
மெக்டோனல்ட்ஸ் உணவகத்தில் அவரை எதிர்கொண்ட காவல்துறை அதிகாரிகள் லுய்கியிடம் அவர் அண்மையில் நியூயார்க் நகர் சென்றிருந்தாரா என வினவியதும் சந்தேக நபர் வெலவெலத்துப் போய் அமைதியானதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
அவர் முகக்கவசம் அணிந்திருந்ததாகவும் மடிக்கணினி, தோள்பை ஆகியவற்றுடன் தனியே அமர்ந்திருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
காவல் நிலையத்தில் சந்தேக நபரின் தோள்பையை சோதித்ததில் அதில் பல அடையாளம் தெரியாத உதிரிப் பாகங்களை பொருத்தி உருவாக்கப்பட்ட ஒரு துப்பாக்கி, துப்பாக்கிக் குண்டுகள் உள்ள சாதனம், சைலன்சர் எனப்படும் துப்பாக்கி சப்தம் வெளியில் கேட்காமல் இருக்க உதவும் கருவி, உடுத்தும் ஆடை, முகக்கவசம் ஆகியவை இருந்ததாக காவல் துறை அதிகாரிகள் கூறினர்.
குற்றச்சாட்டைப் பதிவு செய்ய அல்டூனாவில் உள்ள பிளேர் கவுண்டி நீதிமன்றத்துக்கு லுய்கி மென்கியோன் அழைத்துச் செல்லப்பட்டதாக அதிகாரிகள் விளக்கினர். அங்கு அவர் மீது துப்பாக்கி, மோசடிக் கையெழுத்துக் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. அவர் மீதான குற்றச்சாட்டுகளை அவர் புரிந்துகொண்டாரா என்று லுய்கி மென்கியோனிடம் வினவப்பட்டது. எனினும், அவரிடமிருந்து குற்ற ஒப்புதலோ குற்ற மறுப்போ பெறப்படவில்லை.
இந்நிலையில், நியூயார்க் நகர அரசு வழக்கறிஞர்கள் அவர் மீது கொலைக் குற்றச்சாட்டும் சுமத்தினர். அவரிடம் போலியான அடையாள அட்டை, பெருமளவில் ரொக்கமும் இருந்ததால் அவர் தப்பியோடக்கூடும் எனக் கூறி பிணை வழங்கக்கூடாது என வாதிட்டனர். இதைத் தொடர்ந்து மென்கியோனுக்கு பிணை மறுக்கப்பட்டது.

