சாங்கி விமான நிலையக் குழுமத்தின் வருடாந்தர விமான நிறுவன விருதுகளில் இவ்வாண்டுக்கான பங்காளித்துவ அமைப்பு என்ற அங்கீகாரத்தை இண்டிகோ நிறுவனம் பெற்றுள்ளது.
2011ஆம் ஆண்டிலிருந்து சிங்கப்பூருக்கான சேவைகளை இயக்கி வரும் இண்டிகோ நிறுவனத்தின் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை அங்கீகரிக்கும் விதமாக இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.
தற்போது அது சாங்கி விமான நிலையத்தில் பயணிகளுக்குச் சேவை வழங்கும் ஐந்தாவது ஆகப் பெரிய வெளிநாட்டு விமான நிறுவனமாகும்.
கடந்த மாதம் இந்த விருது வழங்கப்பட்டதாகச் சாங்கி விமான நிலையம், மே 19ஆம் தேதி, தனது இணையத்தளத்தில் பதிவிட்டது.
விருது பெற்றதில் தமது நிறுவனம் பெருமைப்படுவதாக இண்டிகோவின் உலகளாவிய விற்பனைப் பிரிவுத் தலைவர் வினய் மல்ஹோத்ரா தெரிவித்தார்.
சீரான, கட்டுப்படியான, நம்பகமான பயண அனுபவத்தை வழங்குவதில் தாங்கள் கொண்டிருக்கும் கடப்பாட்டை இந்த விருது அங்கீகரிப்பதாக அவர் கூறினார்.
உத்திபூர்வ கட்டமைப்பின் விரிவாக்கமும் இந்தியாவுக்கும் தென்கிழக்காசியாவுக்கும் இடையிலான பயணங்களுக்கான தேவையின் அதிகரிப்பும் சிங்கப்பூரில் இண்டிகோவின் வளர்ச்சியை முன்னெடுத்திருப்பதாகத் திரு மல்ஹோத்ரா தெரிவித்தார்.
“வர்த்தகமுறைப் பயணிகளுக்கும் சுற்றுப்பயணிகளுக்கும் சிங்கப்பூர் முக்கியமான மையப்பகுதியாகத் திகழ்கிறது. அத்துடன், பல்வேறு இந்திய நகரங்களுக்கு எங்கள் நிறுவனம் வழங்கும் நேரடிச் சேவைகள் பயணிகளுக்கு வசதியாக உள்ளது,” என்று அவர் கூறினார்.