வேலை தேடுவோர் முறைமுகப் பாகுபாட்டினால் பாதிக்கப்படக்கூடும் என்று 14 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக நாடாளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமையன்று (ஜனவரி 7) விவாதிக்கப்பட்டது.
வேலையிடத்தில் வயதை அடிப்படையாகக் கொண்டு பாரபட்சத்துடன் நடந்துகொள்வது குறித்து மக்கள் செயல் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் குரல் எழுப்பினர்.
அவர்களில் பாசிர் ரிஸ்-பொங்கோல் குழுத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் திருவாட்டி இயோ வான் லிங், ஜாலான் புசார் குழுத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் திரு ஹெங் சீ ஹாவ், இயோ சூ காங் நாடாளுமன்ற உறுப்பினர் திரு யிப் ஹோன் வெங் ஆகியோர் அடங்குவர்.
ஊழியர்கள் எதிர்நோக்கும் மறைமுகப் பாகுபாட்டினை எதிர்கொள்ள போதுமான நடவடிக்கைகள் நடப்பில் இல்லாதது குறித்து பாட்டாளிக் கட்சியைச் சேர்ந்த ஹெ டிங் ருவும் லுயிஸ் சுவாவும் விளக்கம் கேட்டனர்.
இருவரும் செங்காங் குழுத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர்கள்.
பிள்ளைகள் இருக்கும் ஊழியர்களுக்குத் தேவையில்லா அசௌகரியத்தை ஏற்படுத்தும் நீண்ட வேலை நேரம், குறிப்பிட்ட இனம் அல்லது சமயத்தினருக்கு நியாயமற்ற வகையில் இருக்கும் கொள்கைகளை நடைமுறைப்படுத்துவது ஆகியவற்றை திரு சுவா உதாரணங்களாகக் காட்டினார்.
ஊழியர்களிடம் பாரபட்சத்துடன் நடந்துகொள்ளும் பல உதாரணங்களை நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் சுட்டினர்.
தொடர்புடைய செய்திகள்
இதுதொடர்பாக நாடாளுமன்றத்தில் பேசிய மனிதவள அமைச்சர் டான் சீ லெங் , வேலையிடத்தில் ஊழியர்கள் நியாயமாக நடத்தப்படுவதை உறுதி செய்ய பரிந்துரைக்கப்பட்டுள்ள புதிய சட்டம் ஊழியர்களைப் பாதுகாக்கும் என்று கூறினார்.
அதே வேளையில், வேலையிட நியாய சட்டம், வர்த்தகத் தேவைக்கு ஏற்ப திறன்களை அடிப்படையாகக் கொண்டு ஊழியர்களைப் பணியமர்த்தும் நீக்குப்போக்குத் தன்மையை முதலாளிகளுக்குத் தொடர்ந்து வழங்கும் என்றார் அவர்.