மறைமுகமாக ஆட்குறைப்பு; போக்கு குறித்து என்டியுசி கவலை

மறைமுகமாக ஆட்குறைப்பு; போக்கு குறித்து என்டியுசி கவலை

2 mins read
புதிய வாய்ப்புகள் என்ற பெயரில் ஆட்குறைப்பு மேற்கொள்ளப்படுவதாகக் கவலை
3c1252b8-f556-4d76-8cf7-62726918352e
எச்&எம் நிறுவனத்தின் அறிவிப்பைத் தொடர்ந்து இந்த விவகாரம் தலைதூக்கியுள்ளது. - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

தாங்கள் வேலை செய்யும் நிறுவனங்களின் வெளிநாட்டு வேலை வாய்ப்புகளுக்கு விண்ணப்பிப்பது மட்டுமின்றி அவ்வேலை கிடைத்தாலும்கூட சம்பந்தப்பட்ட ஊழியர்கள் சிங்கப்பூரில் வேலையை இழந்தால் அது ஆட்குறைப்பே என்று மனிதவள அமைச்சும் தேசியத் தொழிற்சங்க காங்கிரசும் (என்டியுசி) சிஎன்ஏ ஊடகத்திடம் தெரிவித்துள்ளன.

ஊழியர்கள் ஏற்கெனவே பார்த்துக்கொண்டிருந்த வேலைகளைப் போலவே உள்ள வாய்ப்புகளுக்கும் தாங்கள் செய்துவந்த வேலைகளுக்கு மாறுபட்ட வேலை வாய்ப்புகளுக்கும் விண்ணப்பிப்போருக்கு இது பொருந்தும்.

உள்ளூர் அல்லது வெளிநாடுகளில் வேலை வாய்ப்புகளுக்கு விண்ணப்பிக்குமாறு சில நிறுவனங்கள் தங்களின் ஊழியர்களைக் கேட்டுக்கொள்ளும் நடைமுறை குறித்துக் கவலைப்படுவதாக என்டியுசி கூறியுள்ளது.

‘வேலை வாய்ப்புகள்’

நிறுவனங்களின் வர்த்தகக் கட்டமைப்பு மறுசீரமைக்கப்படுவதன்பேரில் அந்த வேலை வாய்ப்புகள் ஊழியர்களுக்கான புதிய வாய்ப்புகளாக விளம்பரப்படுத்தப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“இதுபோன்ற நடவடிக்கைகளின் மூலம் சிங்கப்பூரில் வேலை பார்க்கும் ஊழியர், அந்த நிறுவனத்தில் தாம் பார்த்துக்கொண்டிருந்த வேலை தேவைப்படாமல் போனால் அதனால் அகற்றப்படும் வேலை ஆட்குறைப்பு நடவடிக்கைகளாகவே வகைப்படுத்தப்படும்,” என்று என்டியுசி குறிப்பிட்டது.

“தெளிவாகச் சொன்னால், ஒருவர் உள்ளூர் நிறுவனத்துக்கு வேலை பார்க்கும்போது அவர் பார்த்துக்கொண்டிருந்த வேலை தேவைப்படாது என்று முடிவுசெய்யப்பட்டால் அந்நிறுவனத்தின் உள்ளூர் கிளைக்கும் அவருக்கும் உள்ள தொடர்பு முடிந்தது என அர்த்தமாகும்,” என்றும் என்டியுசி சுட்டியது.

மனிதவள அமைச்சின் விளக்கம்

இதன் தொடர்பான சிஎன்ஏயின் கேள்விகளுக்குப் பதிலளித்த மனிதவள அமைச்சு, “சிங்கப்பூரில் ஓர் ஊழியர் பார்த்துக்கொண்டிருந்த வேலை தேவையில்லை என்று முடிவெடுக்கப்பட்டால், உதாரணமாக அந்தப் பொறுப்பு இனி இருக்காது என்றாலோ அது வெளிநாட்டுக்கு மாற்றப்பட்டுள்ளது என்றாலோ, அது ஆட்குறைப்பாகும்.

“அந்த ஊழியர் வெளிநாட்டில் வேலை வாய்ப்புக்கு விண்ணப்பக்கும்போது அதன் முடிவு என்னவாக இருந்தாலும் இது பொருந்தும்,” என்று விவரித்தது.

கடந்த மே 11ஆம் தேதி எச்&எம் நிறுவனம் தென்கிழக்காசியாவுக்கான தனது கிளையை சிங்கப்பூரிலிருந்து மலேசியாவுக்கு மாற்றப்போவதாக ஊழியர்களுக்குத் தெரியப்படுத்தியிருந்தது. அதனையடுத்து என்டியுசியும் மனிதவள அமைச்சும் இவ்வாறு கூறியுள்ளன.

சுவீடனைச் சேர்ந்த நிறுவனமான எச்&எம், தங்களின் வர்த்தக மறுசீரமைப்புப் பணிகளின்கீழ் சிங்கப்பூரை உள்ளடக்கும் வட்டாரத்தில் வேலை செய்யும் தங்களின் ஊழியர்கள் பலரை வட்டார அளவில் 178 வேலை வாய்ப்புகளுக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொண்டதாக அந்நிறுவன ஊழியர்கள் பலர் சிஎன்ஏயிடம் தெரிவித்தனர்.

குறிப்புச் சொற்கள்
சிங்கப்பூர்வர்த்தகம்ஆட்குறைப்புமறுசீரமைப்புஊழியர்