தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

வர்த்தகரை நாடு கடத்தும்படி சிங்கப்பூரிடம் கேட்டுக்கொண்ட இந்தோனீசியா

2 mins read
37c14fc9-a1e5-4271-9353-f36b293e8d8e
தம்மை இந்தோனீசியாவுக்கு நாடு கடத்துவதை எதிர்த்து இந்தோனீசிய வர்த்தகராக பௌலுஸ் டன்னோஸ் வழக்கு கோரியிருப்பதாக சட்ட, உள்துறை அமைச்சர் கா. சண்முகம் (இடது) தெரிவித்தார். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

ஊழல் குற்றம் தொடர்பாகக் கைது செய்யப்பட்ட வர்த்தகரைத் தன்னிடம் ஒப்படைக்குமாறு சிங்கப்பூரிடம் இந்தோனீசியா கோரிக்கை விடுத்துள்ளது.

கைது செய்யப்பட்டவர்களை நாடு கடத்துவது தொடர்பாக சிங்கப்பூருக்கும் இந்தோனிசீயாவுக்கும் இடையிலான ஒப்பந்தம் நடப்புக்கு வந்த பிறகு, இத்தகைய கோரிக்கை விடுக்கப்பட்டிருப்பது இதுவே முதல்முறை.

ஜின் தியான் போ என்று அழைக்கப்படும் பௌலுஸ் டன்னோஸ் எனும் இந்தோனீசிய வர்த்தகர் ஜனவரி 17ஆம் தேதி சிங்கப்பூரில் கைது செய்யப்பட்டார்.

இந்தோனீசியாவில் அவர் ஊழலில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. பௌலுஸ் டன்னோஸ் 60 வயதுக்கும் 70 வயதுக்கும் இடைப்பட்டவர்.

அவரை நாடு கடத்தி தன்னிடம் ஒப்படைக்குமாறு பிப்ரவரி 24ஆம் தேதியன்று சிங்கப்பூரிடம் இந்தோனீசியா அதிகாரபூர்வமாகக் கேட்டுக்கொண்டது. இந்தத் தகவலை சட்ட அமைச்சு திங்கட்கிழமை (மார்ச் 10) வெளியிட்டது.

கைது செய்யப்பட்டவர்களை நாடு கடத்துவது தொடர்பாக சிங்கப்பூருக்கும் இந்தோனீசியாவுக்கும் இடையிலான ஒப்பந்தம் 2024ஆம் ஆண்டு மார்ச் 21லிருந்து நடப்புக்கு வந்தது.

இந்தோனீசிய அரசாங்கத்தின் மின் அடையாள அட்டை திட்டத்தில் தன்னோஸ் ஊழல் புரிந்ததாகக் கூறப்படுகிறது. அவரது செயலால் இந்தோனீசியாவுக்கு 2.3 டிரில்லியன் ரூப்பியா (S$192 மில்லியன்) இழப்பு ஏற்பட்டதாக நம்பப்படுகிறது.

மின் அடையாள அட்டையின் ஒரு பகுதியை உற்பத்தி செய்யும் ஒப்பந்தம் தொழில்நுட்ப நிறுவனமான ஷான்டிபாலா அர்த்தபுத்ராவுக்கு வழங்கப்பட்டது.

அந்த நிறுவனத்தின் தலைவராகவும் இயக்குநராகவும் டன்னாஸ் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

குற்றம் புரிந்து நாட்டைவிட்டு ஓடியவர்கள் பட்டியலில் 2021ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 19லிருந்து டன்னோசை இந்தோனீசியா வைத்திருக்கிறது. டன்னோஸ், 2017ஆம் ஆண்டிலிருந்து சிங்கப்பூரில் வசித்து வருவதாக நம்பப்படுகிறது.

நாடு கடத்த இந்தோனீசியா விடுத்துள்ள கோரிக்கை தொடர்பாக திங்கட்கிழமை (மார்ச் 10) செய்தியாளர் கூட்டம் நடைபெற்றது. அதில் பேசிய சட்ட, உள்துறை அமைச்சர் கா. சண்முகம், இந்த விவகாரத்தை மிகக் கடுமையானதாக சிங்கப்பூர் கருதுகிறது எனத் தெரிவித்தார்.

நாடு கடத்தும் நடவடிக்கையை தலைமைச் சட்ட அதிகாரி அலுவலகம் விரைவுபடுத்தும் என்றும் தம்மை இந்தோனீசியாவுக்கு நாடு கடத்துவதை எதிர்த்து டன்னோஸ் வழக்கு கோரியிருப்பதாக அமைச்சர் சண்முகம் தெரிவித்தார்.

இந்த விவகாரத்துக்குத் தீர்வு காண இரண்டு ஆண்டுகள் அல்லது அதற்கும் அதிகமான காலம் ஆகலாம் என்றார் அவர்.

“நாடு கடத்தும் கோரிக்கையை டன்னோஸ் எதிர்க்காவிடில் ஆறு மாதங்களில் அவர் இந்தோனீசியாவிடம் ஒப்படைக்கப்படலாம். அதற்கு முன்பாகவே அவர் நாடு கடத்தப்படக்கூடும். ஆனால் தம்மை நாடு கடத்த இந்தோனீசியா விடுத்திருக்கும் கோரிக்கையை அவர் ஏற்க மறுத்துவிட்டார். அதை எதிர்த்து அவர் வழக்கு கோரியுள்ளார்,” என்று அமைச்சர் சண்முகம் கூறினார்.

குறிப்புச் சொற்கள்