இந்தோனீசியா அறிவித்த உலகளாவிய குடியுரிமைத் திட்டம்: எதிர்பார்த்த வெற்றி கிட்டவில்லை

இந்தோனீசியா அறிவித்த உலகளாவிய குடியுரிமைத் திட்டம்: எதிர்பார்த்த வெற்றி கிட்டவில்லை

2 mins read
773e61ad-6d88-43e4-808d-a825bdbc1ecf
உலகளாவிய இந்தோனீசியக் குடியுரிமை (ஜிசிஐ) திட்டத்தை நிறுவுவதாக அறிவித்த இந்தோனீசியா, முன்னாள் குடிமக்கள் நாட்டில் வேலை பார்த்தபடி நிரந்தரமாகத் தங்க அனுமதிக்கும் சலுகைகளையும் அறிவித்துள்ளது. - படம்: ராய்ட்டர்ஸ்

ஜகார்த்தா: இந்தோனீசியக் குடியுரிமையைக் கைவிட்டுவிட்டு சென்றவர்களை மீண்டும் தன் வசம் ஈர்க்க இந்தோனீசியா அறிவித்த புதிய திட்டதிற்கு எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை என்று தெரியவந்துள்ளது.

உலகளாவிய இந்தோனீசியக் குடியுரிமை (ஜிசிஐ) திட்டத்தை  நிறுவுவதாக கடந்த ஜனவரி 28 அன்று, அறிவித்தது இந்தோனீசியா. 

அதன்படி, அந்நாட்டு குடியுரிமையை திருப்பிக் கொடுத்துவிட்டு பிறநாட்டில் வசித்து வரும் முன்னாள் குடிமக்களை நாட்டில் வேலை பார்த்தபடி நிரந்தரமாகத் தங்க அனுமதிக்கும் சலுகைகளை அறிவித்தது இந்தோனீசியா.

இரட்டைக் குடியுரிமைக்குப் பதிலாக இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும்,  இந்த அனுமதியைப் பெறுவதற்கான விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான வாய்ப்பு வழங்கப்படுவதாகவும்  இந்தோனீசியக் குடிநுழைவு அமைச்சு  கூறியது.

மேலும் வாழ்நாள் முழுவதற்குமான உறைவிடம் போன்ற சலுகைகளை அறிவித்ததுடன் முன்னாள் குடிமக்கள் நாடு திரும்பிடவும் கோரிக்கை விடுத்தது.

ஆனால் அறிவிக்கப்பட்ட புதிய திட்டத்தில் வரிச் சலுகைகள், நிலம் சார்ந்த உரிமைகள் போன்றவை இடம்பெறாததால் அயல்நாட்டில் வசிக்கும் பல இந்தோனீசிய மக்கள் அது தங்கள் மனத்தை ஈர்க்கவில்லை என்று கூறியுள்ளனர்.

இதற்கிடையே, இந்த ‘ஜிசிஐ’ குறித்து தனது பெற்றோர் தமக்கு தகவல் அனுப்பியபோது, சிங்கப்பூரரான திரு எஸ்.இயான், அந்த அறிவிப்பு தம்மை இந்தோனீசியா வழங்கும் புதிய குடியுரிமைக்கு விண்ணப்பிக்க தூண்டவில்லை என்று கூறினார்.

தன்னார்வ ஊழியராக இருக்கும் அவர் தமது 10வது வயதில் சிங்கப்பூருக்கு குடிபெயர்ந்தார். ‘‘என் பெற்றோர் நிச்சயம் நான் அத்திட்டத்திற்கு சம்மதம் தெரிவிப்பேன் என்று நினைத்து அனுப்பியிருப்பார்கள்.

‘‘அத்திட்டம் நல்ல திட்டம்தான். ஆயினும் அது புலம்பெயர்ந்தோரை மீண்டும் இந்தோனீசியாவிற்கு அழைத்து வரும் வகையில் இல்லை,’’ என்று தாம் கருதுவதாக அவர் கூறியிருக்கிறார்.

இந்தோனீசியாவைப் பொறுத்தவரையில் ‘ஒற்றைக் குடியுரிமை’ எனும் கொள்கைத்தான் ஆண்டாண்டுக்காலமாக பின்பற்றப்பட்டு வந்துள்ளது. இரட்டைக் குடியுரிமையை அனுமதிப்பதற்கால எழுந்த கோரிக்கைகளை அந்த நாடு நீண்ட காலமாக நிராகரித்து வருகிறது.

இருந்தபோதும், தங்கள் தாயகத்தை விட்டு வெளிநாடுகளில் வசிக்கும் இந்தோனீசிய வம்சாவளியைச் சேர்ந்த பலரை மீண்டும் அழைப்பதற்கான முயற்சியாக ‘ஜிசிஐ’ திட்டத்தை அறிவித்தது இந்தோனீசியா.

எனினும், சட்டப்பூர்வ தகுதியை மட்டும் முன்னிலைப்படுத்தும் இத்திட்டம் பெரிய அளவில் மக்களை சென்று சேரவில்லை.

இது குறித்து பேசிய அரசியல் கொள்கை வல்லுநர்கள், ‘ஜிசிஐ’ திட்டத்தை மக்கள் மனம்விரும்பும் வகையில் மாற்ற சம்பளம், தொழில் மற்றும் வேலை வாய்ப்புகள், வாழ்க்கைத் தர மேம்பாடு போன்ற நாட்டின் அடிப்படை பிரச்சினைகளைத் தீர்ப்பதில் இந்தோனீசியா கவனம் செலுத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.

குறிப்புச் சொற்கள்