இந்தோனீசியத் தற்காப்பு அமைச்சர் சிங்கப்பூருக்கு அறிமுகப் பயணம்

2 mins read
c4807dc3-2f3b-40da-be2d-ec81cd577bb0
இந்தோனீசியத் தற்காப்பு அமைச்சர் சாஃப்ரி சம்சுதீனும் (இடது) தற்காப்பு அமைச்சர் இங் எங் ஹெனும் இருநாடுகளுக்கிடையிலான நெருங்கிய, நீண்டகால இருதரப்புத் தற்காப்பு உறவை மீண்டும் உறுதி செய்தனர். - படம்: தகவல், மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சு
multi-img1 of 2

இந்தோனீசியத் தற்காப்பு அமைச்சர் சாஃப்ரி சம்சுதீன் சிங்கப்பூருக்கு அறிமுகப் பயணம் மேற்கொண்டுள்ளதாகத் தற்காப்பு அமைச்சு திங்கட்கிழமையன்று (ஜனவரி 20) தெரிவித்தது.

ஓய்வுப்பெற்ற லெஃப்டினெண்ட் ஜெனரல் சாஃப்ரியைத் தற்காப்பு அமைச்சர் இங் எங் ஹென் தற்காப்பு அமைச்சுக் கட்டடத்தில் வரவேற்றார்.

அங்கு திரு சாஃப்ரிக்கு மரியாதை செலுத்தப்பட்டது.

கௌரவ அணியினர் அணிவகுப்பை அமைச்சர் சாஃப்ரி பார்வையிட்டார்.

அதையடுத்து, இரு அமைச்சர்களும் சந்தித்துப் பேசினர்.

சந்திப்பின்போது இருவரும் இருநாடுகளுக்கிடையிலான நெருங்கிய, நீண்டகால இருதரப்புத் தற்காப்பு உறவை மீண்டும் உறுதி செய்தனர்.

சிங்கப்பூருக்கும் இந்தோனீசியாவுக்கும் இடையிலான தற்காப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, டாக்டர் இங்கும் அமைச்சர் சாஃப்ரியும் இருநாடுகளின் தற்காப்புத்துறை இடையிலான ஒத்துழைப்பு, இருவழித் தொடர்பு ஆகியவற்றை வலுப்படுத்துவது குறித்து கலந்துரையாடினர்.

தற்காப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தம் 2024ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடைமுறைப்படுத்தப்பட்டது.

இந்தோனீசியக் கடற்பகுதிகளிலும் வான்வெளியிலும் சிங்கப்பூர் ஆயுதப் படை பயிற்சி மேற்கொள்ள செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகளை இந்த ஒப்பந்தம் தெளிவுபடுத்துகிறது.

இந்த ஒப்பந்தம் 25 ஆண்டுகளுக்கு நடப்பில் இருக்கும்.

வட்டார நாடுகள் எதிர்கொள்ளும் பாதுகாப்புச் சவால்கள் தொடர்பாகவும் இரு தற்காப்பு அமைச்சர்களும் கலந்துரையாடினர்.

ஆசியான் தற்காப்பு அமைச்சர்களுக்கான சந்திப்பு, எடிஎம்எம் பிளஸ் போன்ற பலதரப்புக் கருத்தரங்குகளில் பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்தும் அவர்கள் பேசினர்.

சிங்கப்பூர் மற்றும் இந்தோனீசியாவின் தற்காப்புத்துறை ஒன்றோடு ஒன்று அடிக்கடி தொடர்புகொள்வதாகத் தற்காப்பு அமைச்சு கூறியது.

ராணுவப் பயிற்சிகள், நிபுணத்துவப் பரிமாற்றங்கள் போன்றவை மூலம் அவை தொடர்பில் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.

மூத்த இந்தோனீசிய அதிகாரிகளை உள்ளடக்கிய பேராளர்க் குழுவுடன் அமைச்சர் சாஃப்ரி சிங்கப்பூருக்கு அதிகாரபூர்வப் பயணம் மேற்கொண்டுள்ளார்.

அவர் பிரதமரும் நிதி அமைச்சருமான லாரன்ஸ் வோங்கைச் சந்தித்துப் பேசினார்.

2024ஆம் ஆண்டு அக்டோபர் மாதம், இந்தோனீசியாவின் தற்காப்பு அமைச்சராக நியமிக்கப்பட்ட திரு சாஃப்ரி, சிங்கப்பூருக்கு வருவதற்கு முன்னதாக மலேசியாவுக்குப் பயணம் மேற்கொண்டார்.

குறிப்புச் சொற்கள்