இந்தோனீசியாவில் ஊழல் வழக்கில் தொடர்புடையவர் எனச் சந்தேகிக்கப்படும் அந்நாட்டு வர்த்தகரான ஜின் தியான் போ என்று அழைக்கப்படும் பௌலுஸ் தன்னோஸ், சிங்கப்பூரில் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
நாடுகடத்தும் நடவடிக்கையை எதிர்கொள்ளும் 60 வயதுக்கும் 70 வயதுக்கும் இடைப்பட்ட அவர், தற்போது பிணைக்கு விண்ணப்பித்துள்ளார்.
வியாழக்கிழமையன்று (மார்ச் 13) நடந்த விசாரணையில், பிணை வழங்கும்படி நீதிமன்றத்தில் மார்ச் 11ஆம் தேதி அவர் மனு தாக்கல் செய்ததாகக் கூறப்பட்டது.
இந்தோனீசிய அரசாங்கத்தின் மின் அடையாள அட்டை திட்டத்தில் ஊழல் புரிந்ததாகச் சந்தேகிக்கப்படும் தன்னோஸ், சிங்கப்பூரில் ஜனவரி 17ஆம் தேதி கைதுசெய்யப்பட்டார்.
அவரது செயலால் இந்தோனீசியாவுக்கு 2.3 டிரில்லியன் ரூப்பியா (S$192 மில்லியன்) இழப்பு ஏற்பட்டதாக நம்பப்படுகிறது.
மின் அடையாள அட்டையின் ஒரு பகுதியை உற்பத்தி செய்யும் ஒப்பந்தம் தொழில்நுட்ப நிறுவனமான ஷான்டிபாலா அர்த்தபுத்ராவுக்கு வழங்கப்பட்டது.
அந்த நிறுவனத்தின் தலைவராகவும் இயக்குநராகவும் தன்னோஸ் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கைது செய்யப்பட்ட வர்த்தகரைத் தன்னிடம் ஒப்படைக்குமாறு பிப்ரவரி 24ஆம் தேதி சிங்கப்பூரிடம் இந்தோனீசியா கேட்டுக்கொண்டதாகச் சட்ட அமைச்சு மார்ச் 10ஆம் தேதி தெரிவித்தது.
தொடர்புடைய செய்திகள்
இவ்வழக்கு விசாரணையை நீதிபதி மார்ச் 19ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
மார்ச் 13ஆம் தேதி நீதிமன்றத்தில் முன்னிலையான தன்னோஸ், இந்தோனீசியாவுக்குத் தன்னை நாடு கடத்தும் நடவடிக்கையில் உடன்பாடில்லை எனக் கூறினார்.
முன்னதாக, மார்ச் 10ஆம் தேதி நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில், பிணைக்கு விண்ணப்பிக்க தன்னோசுக்கு உரிமை உள்ளதாக உள்துறை, சட்ட அமைச்சர் கா. சண்முகம் கூறினார்.
நாடு கடத்தும் நடவடிக்கையை தலைமைச் சட்ட அதிகாரி அலுவலகம் விரைவுபடுத்தும் என்றும் தம்மை இந்தோனீசியாவுக்கு நாடு கடத்துவதை எதிர்த்து தன்னோஸ் வழக்கு கோரியிருப்பதாக அமைச்சர் சண்முகம் தெரிவித்தார்.
மேலும், இவ்விவகாரத்துக்குத் தீர்வு காண இரண்டு ஆண்டுகள் அல்லது அதற்கும் அதிகமான காலம் ஆகலாம் என்றும் அவர் சொன்னார்.

