சிங்கப்பூரில் எக்சான்மோபிலுக்குச் சொந்தமான எஸ்ஸோ பெட்ரோல் நிலையங்களை இந்தோனீசியாவின் சந்திரா அஸ்ரி குழுமம் கையகப்படுத்த உள்ளது.
சந்திரா அஸ்ரி குழுமம் தொடர்ந்து எஸ்ஸோ எரிபொருளை விற்பனை செய்யும் என்றும் எஸ்ஸோ முத்திரையின்கீழ் பெட்ரோல் நிலையங்களை இயக்கும் என்றும் எக்சான்மோபில் ஆசிய பசிபிக் தலைவரும் அதன் நிர்வாக இயக்குநருமான ஜெரால்டின் சின், ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் வெள்ளிக்கிழமை (அக்டோபர் 24) தெரிவித்தார்.
“ஒழுங்குமுறை ஒப்புதல்களுக்கும் இதர விவகாரங்களுக்கும் உட்பட்டு, ஆண்டிறுதிக்குள் விற்பனையை இறுதிப்படுத்த நாங்கள் இலக்கு வைத்துள்ளோம்,” என்றும் அவர் கூறினார்.
இந்த உடன்பாட்டில் கிட்டத்தட்ட 60 பெட்ரோல் நிலையங்களும் அவற்றுடன் தொடர்புடைய விநியோக ஒப்பந்தங்களும் அடங்கும்.
இந்த உடன்பாட்டின் மதிப்பு வெளியிடப்படவில்லை. இருப்பினும், இத்தகைய விற்பனை ஏறத்தாழ US$1 பில்லியனை (S$1.3 பி.) திரட்டக்கூடும் என்று புளூம்பெர்க் செய்தி நிறுவனத்திடம் தகவலறிந்த வட்டாரங்கள் 2024 டிசம்பரில் தெரிவித்திருந்தன.
வேதியியல், உள்கட்டமைப்புத் துறைகளில் ஒரு பெரிய இந்தோனீசியக் குழுமமான சந்திரா அஸ்ரி, அந்நாட்டின் மிகப்பெரிய ஒருங்கிணைந்த பெட்ரோலிய வேதியியல் வளாகத்தை இயக்குகிறது.
சிங்கப்பூரின் சில்லறை விற்பனை எரிபொருள் சந்தையிலிருந்து வெளியேற அமெரிக்க எரிசக்தி நிறுவனமான எக்சான்மோபில் முயன்றதால், சொத்துகளை வாங்க சந்திரா அஸ்ரி குழுமம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக ஏப்ரலில் ராய்ட்டர்ஸ் வெளியிட்டிருந்த செய்தியை இந்த அறிவிப்பு உறுதிப்படுத்துகிறது.
எஸ்ஸோ பெட்ரோல் நிலையங்களை விற்பதற்கும் மொத்த விற்பனை மாதிரிக்கு மாறுவதற்குமான இந்த முடிவு, உலகளவில் நிறுவனம் எரிபொருளைச் சந்தைப்படுத்தும் முறைக்கு ஒத்திருப்பதாக திருவாட்டி சின் சொன்னார்.
தொடர்புடைய செய்திகள்
“இந்த மாற்றம் நிகழும்போது வழக்கம்போல் வணிகம் தொடரும் என நாங்கள் எதிர்பார்க்கிறோம். விசுவாசத் திட்ட அனுகூலங்களைத் தொடர்ந்து அங்கீகரிப்பது உட்பட எங்கள் வாடிக்கையாளர்களுக்குச் சீரான அனுபவத்தை வழங்க சந்திரா அஸ்ரி குழுமத்துடன் இணைந்து பணியாற்றுவோம்,” என்றும் அவர் கூறினார்.

