வங்கியில் $10,000 போலி பணத்தாளைச் செலுத்த முயன்ற இந்தோனீசியருக்குச் சிறை

வங்கியில் $10,000 போலி பணத்தாளைச் செலுத்த முயன்ற இந்தோனீசியருக்குச் சிறை

1 mins read
5edd41f3-7d98-429a-9e4b-57854c202445
பரிசோதனையின்போது ஆரிக் அளித்த பணத்தாள் போலியானது என வங்கி அதிகாரிகள் கண்டறிந்தனர். - படம்: சிங்கப்பூர் காவல்துறை

தனது காதலியிடமிருந்து $10,000 போலி பணத்தாளைப் பெற்ற இந்தோனீசிய இளையரான ஆரிக் கென்ஜி அல்மிரா வலேரியன், சிங்கப்பூருக்கு வந்து தனது உறவினரின் வங்கிக் கணக்கில் அதனைச் செலுத்த முயன்றதாகக் கூறப்படுகிறது.

அந்தப் பணத்தாள் போலியானது எனச் சந்தேகித்த போதிலும் அந்தக் குற்ற நடவடிக்கையில் அவர் ஈடுபட்டார்.

பரிசோதனையின்போது அப்பணத்தாள் போலியானது என வங்கி அதிகாரிகள் கண்டறிந்தனர். அதனையடுத்து அவர் கைதுசெய்யப்பட்டார்.

கள்ளப் பணத்தை நல்ல பணமாக வங்கியில் செலுத்த முயன்ற குற்றத்திற்காக 22 வயது வலேரியனுக்குப் புதன்கிழமையன்று (பிப்ரவரி 25) ஏழு மாதச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

தன்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை அவர் ஒப்புக்கொண்டதாக நீதிமன்ற ஆவணங்கள் தெரிவிக்கின்றன.

2025ஆம் ஆண்டு மே மாதம், ஆரிக் இந்தோனீசியாவில் இருந்தபோது, அப்ரில்லியா என அறியப்படும் அவரது காதலி அந்தப் போலி பணத்தாளை அவரிடம் கொடுத்தார்.

அந்தப் பணத்தாளைத் தன்னால் இந்தோனீசிய ரூபாயாக மாற்ற முடியவில்லை எனவும் தனக்கு உதவும்படியும் அப்ரில்லியா ஆரிக்கிடம் கேட்டார்.

இந்தோனீசியாவில் அப்பணத்தாளை மாற்ற முயன்றபோது அந்நாட்டில் செயல்படும் பணம் மாற்றும் நிலையங்கள் அதை நிராகரித்தன.

அதனையடுத்து, சிங்கப்பூரில் உள்ள தனது உறவினரின் வங்கிக் கணக்கில் அப்பணத்தைச் செலுத்த அவர் முயன்றதாகவும் அப்போது அவர் பிடிப்பட்டதாகவும் கூறப்பட்டது.

குறிப்புச் சொற்கள்