குழந்தைப் பராமரிப்பு விடுப்பை அமல்படுத்த அவகாசம் தேவை: இந்திராணி

குழந்தைப் பராமரிப்பு விடுப்பை அமல்படுத்த அவகாசம் தேவை: இந்திராணி

2 mins read
698eb524-6038-4222-a208-8aa25697be0c
கூடுதலான குழந்தைப் பராமரிப்பு விடுப்பு அமல்படுத்தப்படும்முன் பல்வேறு விவகாரங்கள் நடப்புக்கு வரவேண்டும் என்று பிரதமர் அலுவலக அமைச்சர் இந்திராணி ராஜா தெரிவித்தார். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
Google News Preferred Icon

சிங்கப்பூரின் குழந்தைப் பராமரிப்பு விடுப்புத் திட்டதிற்கான மாற்றங்களை நடைமுறைப்படுத்த சில காலம் தேவைப்படும் என்று பிரதமர் அலுவலக அமைச்சர் இந்திராணி ராஜா கூறியுள்ளார்.

அரசாங்கம் அதற்குரிய சட்டத் திருத்தங்களைத் தயார்படுத்தவும் செயல்முறைக்கு ஏற்ற விவரங்களை ஆராயவும் பல மாதங்கள் தேவைப்படும் என்றார் அவர்.

திருமணம், பெற்றோர்நிலை மறுசீரமைப்புப் பணிக்குழுவின் தலைவரான குமாரி இந்திராணி, சிஎன்ஏ938 வானொலிக்குப் புதன்கிழமை (செப்டம்பர் 2) பேட்டியளித்தார்.

கூடுதலான குழந்தைப் பராமரிப்பு விடுப்பு அமல்படுத்தப்படும்முன் பல்வேறு விவகாரங்கள் நடப்புக்கு வரவேண்டும் என்ற அவர், குழந்தை மேம்பாட்டு இணைச் சேமிப்புச் சட்டம் உள்ளிட்டவை நடப்புக்குவர நேரம் எடுக்கும் என்றார்.

செயல்பாட்டு விவகாரங்கள் குறித்து முதலாளிகள், தொழிற்சங்கங்கள், பெற்றோர் என வெவ்வேறு தரப்பினரிடம் கலந்துரையாடி அனைத்து விவரங்களையும் நெறிப்படுத்தவேண்டும் என்று குமாரி இந்திராணி விளக்கம் அளித்தார்.

ஆகஸ்ட் 23ஆம் தேதி இடம்பெற்ற தேசிய தினப் பேரணி உரையில் வேலை செய்யும் பெற்றோருக்கான கூடுதல் விடுப்புகள் பற்றி பிரதமர் லாரன்ஸ் வோங் அறிவித்தார்.

அதன்படி ஒரு குழந்தை இருக்கும் பெற்றோருக்கு ஒவ்வோர் ஆண்டும் 8 நாள்களும் இரண்டு குழந்தைகள் இருக்கும் பெற்றோருக்கு 10 நாள்களும் கூடுதல் விடுப்பு வழங்கப்படும்.

மூன்று குழந்தைகள் இருக்கும் பெற்றோருக்கு 12 நாள்கள் வரையிலான விடுப்பு வழங்கப்படும் என்று பிரதமர் வோங் குறிப்பிட்டார்.

தற்போது ஆறு அல்லது அதற்குக் கீழுள்ள வயதில் உள்ள குழந்தைகளைக் கொண்ட பெற்றோருக்கு ஆறு நாள்கள் குழந்தைப் பராமரிப்பு விடுப்பு வழங்கப்படுகிறது. ஏழிலிருந்து 12 வயதுக்கு இடைப்பட்ட குழந்தைகள் கொண்ட பெற்றோருக்குக் கூடுதலாக இரண்டு நாள்கள் விடுப்பு வழங்கப்படுகிறது.

பிள்ளைப் பராமரிப்பு விடுப்பில் செல்லும் பெற்றோருக்கு ஏற்ற சரியான தொகையை முதலாளிகளுக்கு வழங்க தகவல் தொழில்நுட்பக் கட்டமைப்புகளும் மேம்படுத்தப்படவேண்டும்.

“எனவே, இவற்றைச் செயல்படுத்துவதற்குப் பல மாதங்கள் தேவைப்படும். இவையெல்லாம் முதலில் சரிசெய்யப்பட்ட பிறகு, பிள்ளைப் பராமரிப்பு விடுப்பு எப்போது தொடங்கும் என்பதைக் கூடிய மட்டும் விரைவில் அறிவிக்க முயல்கிறோம்,” என்றார் குமாரி இந்திராணி.

குறிப்புச் சொற்கள்