புதிய பட்டதாரிகளுக்குக் கூடுதல் முழுநேர வேலைவாய்ப்பை அளிக்கும் வகையில் ‘பட்டதாரிகளுக்கான தொழில்துறை வேலைப் பயிற்சித் திட்டம்’ (GRIT) விரிவடையவுள்ளது.
நாடாளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (மார்ச் 3) மனிதவள அமைச்சுக்கான நிதி ஒதுக்கீட்டு விவாதத்தின்போது இதனை அறிவித்த மனிதவள அமைச்சர் டாக்டர் டான் சீ லெங், இவ்வாண்டு பட்டம் பெறும் பல்கலைக்கழக மாணவர்களும் அந்தத் திட்டத்திற்கு விண்ணப்பம் செய்யலாம் எனத் தெரிவித்துள்ளார்.
கல்வி நிலையங்களிலிருந்து வேலைக்கு மாறுவதில் சவால் இருப்பதை அறிவதாகக் கூறிய டாக்டர் டான், ஆரம்பநிலை வேலைகளைச் செயற்கை நுண்ணறிவு எவ்வாறு பாதிக்கிறது என்பது பற்றிய பதற்றங்கள் இருப்பதையும் ஒப்புக்கொண்டார். இருந்தபோதும், புதிய பட்டதாரிகளுக்கான வேலைச்சந்தை பொதுவாக மீள்திறன்மிக்கதாக இருப்பதாக அவர் கூறினார்.
வேலை தேடுவோரைவிட காலியிடங்கள் அதிகம் இருந்தாலும், தங்களுக்குச் சரியாகப் பொருந்தும் வேலைகளைத் தேடச் சிரமப்படுவோருக்கு ‘பட்டதாரிகளுக்கான தொழில்துறை வேலைப் பயிற்சித் திட்டம்’ கைகொடுப்பதாக அவர் கூறினார்.
இதுவரை 400க்கும் மேற்பட்ட பட்டதாரிகள், பல்வேறு துறைகளில் பயிற்சி பெற்று வருகின்றனர்.
பாதுகாப்புடன் செயல்பட வேண்டிய சூழலில் வேலைக்கான ஆட்சேர்ப்புக்கு இந்தத் திட்டம் உதவியிருப்பதாக முதலாளிகள் தெரிவித்துள்ளனர்.
“பயிற்சி பெறுவோரை வேலைக்கு எடுக்கும் முதலாளிகளுக்குத் தொடர்ந்து சலுகைகளை வழங்க நாங்கள் திட்டமிடுகிறோம். அத்துடன், திட்டத்தின் மூலம் பயிற்சிக்கான செலவுகளில் 70 விழுக்காட்டுக்கு மானியமும் வழங்கப்படும்,” என்று டாக்டர் டான் தெரிவித்தார்.
அத்துடன், இளைய நிபுணர்கள் முன்கூட்டியே வெளிநாட்டு வேலை அனுபவம் பெறுவதை ஆதரிக்கும் வெளிநாட்டுச் சந்தைகள் ஈடுபாட்டுத் திட்டம் (OMIP) விரிவுபடுத்தப்படும் என்றும் அமைச்சர் டான் சீ லெங் அறிவித்தார்.
தொடர்புடைய செய்திகள்
இந்தத் திட்டத்தின்மூலம் மாணவர்களுக்கான வாய்ப்புகளை முன்கூட்டியே வழங்குவதன்வழி திறனாளர்களை உருவாக்கும் முறை மேம்படுவதாகவும் அனைத்துலகப் போட்டித்தன்மை உயர்வதாகவும் அவர் கூறினார். மேலும், வேலை - கல்வித் திட்டமும் (WSP) கணிசமாக வளர்ச்சி கண்டுள்ளது என்றார் அவர்.
வாழ்நாள் முழுவதும் பயிற்சியையும் வேலையையும் இணைக்கும் நீக்குப்போக்கான பாதைகளை ஆதரிக்கும் பொருட்டு, பொருளியல் உத்தி மறுஆய்வுக் குழுவின் பரிந்துரைக்கு ஏற்ப வேலை - கல்வி பட்டயத் திட்டம் (Work-Study Diploma) மேம்படுத்தப்படும் என்று கல்வி அமைச்சு முன்னதாகப் பகிர்ந்துகொண்டது.

