சிங்கப்பூரின் ஜூன் மாதத் தொழிற்சாலை உற்பத்தி, ஆண்டு அடிப்படையில் 7.2 விழுக்காடு வளர்ச்சி கண்டது.
செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்திற்கான உலகளாவிய தேவை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக, மின்னணுவியல் துறையின் உற்பத்தி பேரளவில் வளர்ச்சி கண்டு நாட்டின் தொழிற்சாலை உற்பத்தியை முன்னெடுத்துச் சென்றது.
மின்னணுவியல் துறையின் உற்பத்தி ஜூன் மாதம் அதிகபட்சமாக 21.3 விழுக்காடு வளர்ச்சி கண்டது. செயற்கை நுண்ணறிவு தொடர்பான தொடர்ச்சியான தேவை நிலவியதால், தகவல் தொடர்பு, பயனீட்டாளர் மின்னணுப் பிரிவு 32.1 விழுக்காடும் பகுதிமின்கடத்திப் பிரிவு 21.1 விழுக்காடும் வளர்ச்சி பெற்றதே இதற்குக் முக்கியக் காரணமாகும்.
இதனுடன் துல்லியப் பொறியியல், போக்குவரத்துப் பொறியியல் துறைகளில் நிலவிய வலுவான தேவையும் தொழிற்சாலை உற்பத்தி உயர்வுக்கு முக்கியப் பங்களித்துள்ளது.
இருப்பினும், புளூம்பெர்க் கருத்துக் கணிப்பில் பொருளியல் நிபுணர்கள் கணித்திருந்த 9.3 விழுக்காட்டு உயர்வைவிட இது குறைவாகும். வேதிப்பொருள், உயிரியல் மருத்துவம், பொது உற்பத்தி ஆகிய துறைகளில் உற்பத்தி கணிசமான சரிவைச் சந்தித்ததே இந்த எதிர்பார்ப்பிற்கும் உண்மை நிலைக்கும் இடையிலான இடைவெளிக்கு முக்கியக் காரணமாக அமைந்தது.
மாற்றங்கள் அதிகம் கொண்ட உயிரியல் மருத்துவ உற்பத்தித் துறையைத் தவிர்த்து, நாட்டின் உற்பத்தி 9.6 விழுக்காடு அதிகரித்ததாக பொருளியல் வளர்ச்சிக் கழகம் திங்கட்கிழமை (ஜூலை 27) வெளியிட்ட புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
உலகளாவிய வர்த்தகச் சூழலில் பல்வேறு சவால்களும் மாறுபட்ட போக்குகளும் நிலவி வரும்போதிலும், சிங்கப்பூரின் மின்னணுவியல் துறை வரும் மாதங்களில் நாட்டின் தொழிற்சாலை உற்பத்தி வளர்ச்சியைத் தொடர்ந்து வலுவாக முன்னெடுத்துச் செல்லும் என்று பொருளியல் வல்லுநர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக, பகுதிமின்கடத்திகளுக்கான உலகளாவிய தேவை அதிகரித்து வருவதால், மின்னணுத் துறையின் வளர்ச்சி வரும் காலாண்டுகளிலும் நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

