விமானங்களில் பசுமை எரிபொருளைப் பயன்படுத்துவதற்குக் கூடுதல் செலவு ஆகிறது என்பதை வாடிக்கையாளர்கள் புரிந்துகொள்வது அவசியம் என்று துறைசார்ந்தோர் வலியுறுத்தியுள்ளனர்.
சுற்றுச்சூழலுக்குக் குறைவான தூய்மைக்கேட்டை விளைவிக்கும் விமான எரிபொருள், பயன்படுத்தப்பட்ட சமையல் எண்ணெய் போன்ற கழிவுப் பொருள்களிலிருந்து தயாரிக்கப்படுகிறது. ஆனால், அது வழக்கமான விமான எரிபொருளின் விலையைவிட மிக அதிகம்.
உலக வெப்பமயமாதல் அதிகரிக்கும் சூழலில், நீடித்த நிலைத்தன்மையுடன்கூடிய விமான எரிபொருள் தயாரிப்பில் இப்போது முதலீடு செய்யாவிட்டால், பின்னர் மோசமான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
‘டிஎச்எல் எக்ஸ்பிரஸ் சிங்கப்பூர்’ நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் கிறிஸ்டோஃபர் ஓங், இவ்வாறு எச்சரித்தார்.
சாங்கி சரக்குவிமானப் போக்குவரத்து நிலையத்தில் அமைந்துள்ள கட்டுசிப்ப வளாகத்தில் (Parcel facility) வியாழக்கிழமை (ஆகஸ்ட் 7) அவர் ஊடகத்தினரைச் சந்தித்தார்.
புதுப்பிக்கப்படக்கூடிய எரிபொருள் உற்பத்தியில் ஈடுபட்டுள்ள ஃபின்லாந்தின் ‘நெஸ்டே’ நிறுவனத்துடன் இணைந்து அந்த ஊடகச் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இரு நிறுவனங்களும் கடந்த ஜூலை மாதம் ஓர் உடன்படிக்கையில் கையெழுத்திட்டன.
அதன்கீழ், சிங்கப்பூரில் உள்ள ‘நெஸ்டே’ சுத்திகரிப்பு ஆலையில் தயாரிக்கப்படும் நீடித்த நிலைத்தன்மையுடன்கூடிய விமான எரிபொருளைச் சாங்கி விமான நிலையத்திலிருந்து புறப்படும் தனது சரக்கு விமானங்களில் ‘டிஎச்எல் எக்ஸ்பிரஸ் சிங்கப்பூர்’ பயன்படுத்தும். 2026ஆம் ஆண்டு ஜூன் மாதம் வரை இது நடப்பிலிருக்கும்.
தொடர்புடைய செய்திகள்
ஏற்கெனவே சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் குழுமமும் துபாயின் எமிரேட்ஸ் விமான நிறுவனமும் இதேபோன்ற ஆனால் சிறிய அளவிலான ஒப்பந்தத்தைச் செய்துகொண்டுள்ளன.
‘நெஸ்டே’ நிறுவனம் ‘டிஎச்எல் எக்ஸ்பிரஸ்’ நிறுவனத்துக்கு மொத்தம் 7,400 டன் (கிட்டத்தட்ட 9.5 மில்லியன் லிட்டர்) அளவிலான நீடித்த நிலைத்தன்மையுடன்கூடிய விமான எரிபொருளை வழங்கும்.
‘டிஎச்எல் எக்ஸ்பிரஸ்’ சிங்கப்பூரிலிருந்து இயக்கும் ஐந்து போயிங் 777 வகை சரக்கு விமானங்களின் மொத்த எரிபொருள் பயன்பாட்டில் 35 முதல் 40 விழுக்காட்டுக்கு அது சமம். ஆசியாவில் ஆக அதிகமான, நீடித்த நிலைத்தன்மையுடன்கூடிய விமான எரிபொருள் கொள்முதல் இது.
இந்த எரிபொருளால் நிறுவனத்தின் கரிம வெளியீடு பெரிதும் குறையும் என்று கூறிய திரு ஓங், எதிர்காலத்தில் பசுமை எரிபொருள்களின் விலை குறையும் என்று நம்புவதாகக் குறிப்பிட்டார்.
இருந்தாலும் வழக்கமான விமான எரிபொருளின் விலைக்கு ஈடாக அது குறையாது என்றார் அவர்.
பாரம்பரியமான படிம எரிபொருள்களுடன் ஒப்பிடுகையில் பசுமை எரிபொருள்களின் கரிம வெளியீடு குறைவு என்பது மட்டுமன்றி குறைவான புகைக்கரியையே அவை வெளியிடும் என்று ‘நெஸ்டே’ நிறுவனம் குறிப்பிட்டது.
துவாஸில் உள்ள அதன் சுத்திகரிப்பு ஆலையில் கிட்டத்தட்ட ஒரு மில்லியன் டன் பசுமையான விமான எரிபொருளைத் தயாரிக்க முடியும். உலகில் இத்தகைய ஆகப் பெரிய நிலையம் அது.

