இந்தியச் சமூகத்தை வலுப்படுத்த அமைக்கப்படும் ‘இணை’ குழு: தினேஷ்

இந்தியச் சமூகத்தை வலுப்படுத்த அமைக்கப்படும் ‘இணை’ குழு: தினேஷ்

2 mins read
79a0508e-e9f8-414f-8f62-e02458fb7d88
‘இணை’ குழுவை அமைக்கும் முயற்சிகளின் ஒரு பகுதியாக, 2025ல் பல்வேறு கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டன. அத்தகைய ஒரு கலந்துரையாடலில் பங்கேற்பாளர்களுடன் திரு தினே‌ஷ் வாசு தாஸ். - படம்: கலாசார, சமூக, இளையர்துறை அமைச்சு

சிங்கப்பூரின் இந்திய அடையாளத்தை வலுப்படுத்த, ‘இணை’ எனப்படும் புதிய இந்தியச் சமூக ஈடுபாட்டு, மேம்பாட்டுக் குழு ஒன்று அமைக்கப்படும்.

நாடாளுமன்றத்தில் வியாழக்கிழமை (மார்ச் 5) நடைபெற்ற நிதி ஒதுக்கீட்டு விவாதத்தின்போது கலாசார, சமூக, இளையர்துறை துணை அமைச்சர் தினே‌ஷ் வாசு தாஸ் இத்தகவலைப் பகிர்ந்தார்.

சட்ட, போக்குவரத்து மூத்த துணை அமைச்சர் முரளி பிள்ளையுடன் இணைந்து இக்குழுவிற்கு திரு தினேஷ் தலைமை தாங்குவார்.

இந்தியச் சமூகத்தின் சவால்களை எதிர்கொள்வதில் இந்திய அமைப்புகளுக்குத் துணைபுரிய புதிய குழு ஒன்று அமைக்கப்படும் என்று 2025 ஆகஸ்ட்டில் தேசியப் பாதுகாப்பு ஒருங்கிணைப்பு அமைச்சரும் உள்துறை அமைச்சருமான கா.சண்முகம் அறிவித்திருந்தார்.

‘இணை’ குழுவை அமைக்கும் முயற்சிகளின் ஒரு பகுதியாக, 2025ல் பல்வேறு பங்குதாரர்களுடனும் சமூகக் குழுக்களுடனுடம் கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டதைத் திரு தினேஷ் சுட்டினார்.

150க்கும் மேற்பட்ட இந்திய அமைப்புகளின் பிரதிநிதிகள், 240க்கும் மேற்பட்ட இந்திய இளம் தலைவர்கள் அக்கலந்துரையாடல்களில் ஈடுபட்டனர். இந்தியச் சமூகம் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து பங்கேற்பாளர்கள் தங்கள் கருத்துகளைப் பகிர்ந்தனர்.

அவர்களின் கருத்துகள், சமூக ஒருங்கிணைப்பு, மேம்பாடு உள்ளிட்ட பொதுவான கருப்பொருள்களை மையமாகக் கொண்டிருந்ததாக திரு தினேஷ் கூறினார்.

“இக்குழு, அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு இந்தியச் சமூகத்தை முன்னெடுத்துச் சொல்லும்,” என்றார் அவர்.

முதலில், எளிதில் பாதிக்கப்படக்கூடிய, வசதி குறைந்தவர்கள்மீது குழு கவனம் செலுத்தும். அடுத்து, இந்தியச் சமூகத்தில் ஒருங்கிணைப்பை மேம்படுத்த அது வழிகளை ஆராயும்.

“இதைத் தொடங்குவதற்கு விளையாட்டு, கலைத் துறைகள் சிறந்த தளங்களாக உள்ளன,” என்றார் திரு தினேஷ்.

இக்குழு மேற்கொள்ளும் முயற்சிகள்வழி, இளையர்களின் பங்களிப்பு மீதும் அடுத்த தலைமுறை இந்தியச் சமூகத் தலைவர்களைப் பேணுவதிலும் கவனம் செலுத்தப்படும் என்று அவர் கூறினார்.

“சிங்கப்பூர் இந்தியர் மேம்பாட்டுச் சங்கம் (சிண்டா), நற்பணிப் பேரவை உள்ளிட்ட சமூக அமைப்புகள் தொடர்ந்து ஆற்றிவரும் சிறப்பான பணியை அடுத்தகட்டத்திற்கு ‘இணை’ எடுத்துச் செல்லும்,” என்றார் அவர்.

ஆண்டுதோறும் நடைபெறவுள்ள ‘இணை’ மன்றத்தில் சமூக நபர்கள் ஒன்றுகூடி, முன்னேற்றத்தை மதிப்பாய்வு செய்து, எதிர்கால முயற்சிகள் பற்றி கலந்துரையாடுவார்கள்.

2026ன் முதல் ‘இணை’ மன்றம், வரும் ஏப்ரலில் தொடங்கும். கூடுதல் விவரங்கள் பின்னர் பகிரப்படும்.

“சமூக உறுப்பினர்கள் முன்வந்து தங்கள் கருத்துகளை பகிர்ந்துகொள்ளவேண்டும்,” என்று திரு தினேஷ் கேட்டுக்கொண்டார்.

குறிப்புச் சொற்கள்