சிங்கப்பூரில் முன்னெப்போதும் இல்லாத வகையில் குறைவாக இருக்கும் சமத்துவமின்மை: பிரதமர் வோங்

சிங்கப்பூரில் முன்னெப்போதும் இல்லாத வகையில் குறைவாக இருக்கும் சமத்துவமின்மை: பிரதமர் வோங்

2 mins read
6a5bf79e-c342-4f55-b54a-7ef5564a9b40
நீதி, நேர்மைமிக்க மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய சமுதாயத்தை உருவாக்க அதிகாரிகள் தொடர்ந்து தீவிர முயற்சியில் இறங்குவர் என்று பிரதமர் லாரன்ஸ் வோங் குறிப்பிட்டார். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூரில் முன்னெப்போதும் இல்லாத அளவில் சமத்துவமின்மை குறைவாக இருப்பதாகப் பிரதமர் லாரன்ஸ் வோங் தெரிவித்துள்ளார்.

வருமானம், செல்வம், சமத்துவமின்மை ஆகியவை தொடர்பான தரவுகள் திங்கட்கிழமை (பிப்ரவரி 9) வெளியிடப்பட்டன.

கடந்த பத்தாண்டில் சிங்கப்பூரின் கொள்கைகள் பலனளித்துள்ளதை இது காட்டுவதாகப் பிரதமர் வோங் கூறினார்.

ஆனால், புதிய சவால்கள் ஏற்பட்டுள்ள நிலையில், வித்தியாசமான அணுகுமுறைகளைக் கையாளும் விருப்பமும் கூடுதல் முயற்சியும் அவசியம் என்றார் அவர்.

நாட்டைச் சரியான திசையில் கொண்டுசெல்ல இது மிகவும் முக்கியம் என்று திரு வோங் தெரிவித்தார்.

பொருளியல் முதிர்ச்சியடையும் வேளையில், சமூகப் பொருளியல் நிலையில் தனிநபர்கள் மற்றும் குடும்பங்களின் மாற்றம் குறைந்துள்ளதைக் காட்டும் அறிகுறிகள் தென்படுவதாக அவர் கூறினார்.

வாழ்க்கைச் செலவினம், பொருளியல் நிச்சயமற்ற தன்மை ஆகியவை குறித்துச் சிங்கப்பூரர்கள் பலரிடையே தொடர்ந்து பதற்றம் நிலவுகிறது.

நீதி, நேர்மைமிக்க மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய சமுதாயத்தை உருவாக்க அதிகாரிகள் தொடர்ந்து தீவிர முயற்சியில் இறங்குவர் என்று நிதி அமைச்சருமான திரு வோங் குறிப்பிட்டார்.

“இதுவே ‘முன்னேறும் சிங்கப்பூர்’ திட்டத்தின் நாடித் துடிப்பு. அணுகுமுறைகளையும் சமூக ஒப்பந்தத்தையும் புதுப்பிக்கிறோம். இதன்மூலம் வாழ்வில் முன்னேற ஒவ்வொரு சிங்கப்பூரருக்கும் உண்மையான, அர்த்தமுள்ள வாய்ப்புகள் கிடைக்கும். சவால்மிக்க உலகளாவியச் சூழல் ஏற்பட்டுள்ளபோதிலும் தொடர்ந்து ஒன்றிணைந்து முன்னேறுவோம்,” என்று பிரதமர் வோங் தெரிவித்தார்.

கடந்த பத்து ஆண்டுகளில், பணவீக்கத்தைக் கருத்தில் கொண்டு சரிசெய்யப்பட்ட வருமானம் அனைத்து சம்பளப் பிரிவுகளிலும் அதிகரித்திருப்பதாக நிதி அமைச்சு வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதைப் பிரதமர் வோங் சுட்டினார்.

நடுத்தர, உயர் வருமானப் பிரிவைச் சேர்ந்தவர்களைக் காட்டிலும் குறைந்த வருமானம் ஈட்டுவோருக்கான சம்பள உயர்வு வலுவாக இருந்ததாக அவர் கூறினார்.

குறிப்புச் சொற்கள்