தட்டம்மை அதிகமுள்ள நாடுகளுக்குச் செல்லும் கைக்குழந்தைகளுக்குத் தடுப்பூசி கட்டாயம்: ஓங் யி காங்

தட்டம்மை அதிகமுள்ள நாடுகளுக்குச் செல்லும் கைக்குழந்தைகளுக்குத் தடுப்பூசி கட்டாயம்: ஓங் யி காங்

1 mins read
eb5e14ab-eccc-42b0-91e8-4dc911dcb46b
காற்றின் மூலமும் நேரடித் தொடர்பாலும் தட்டம்மைக் கிருமி பரவும். - படம்: ஐஸ்டாக்ஃபோட்டோ

தட்டம்மைச் சம்பவங்கள் அதிகம் பதிவாகியுள்ள நாடுகளுக்குப் பயணம் மேற்கொள்ளும் 6 மாதம் முதல் 11 மாதம் வரையிலான கைக்குழந்தைகள் ‘எம்எம்ஆர்’ எனும் தடுப்பூசியைப் போட்டுக்கொள்ளவேண்டும்.

அந்தத் தடுப்பூசியை இருமுறை போடவேண்டும். முதல் முறை, பயணத்திற்குக் குறைந்தது இரண்டு வாரங்களுக்கு முன்னர் போட்டுக்கொள்ளவேண்டும் என்று தொற்றுநோய்த் தடுப்பு நிலையம் (சிடிஏ) ஆலோசனை கூறியது.

நீண்டகால எதிர்ப்பாற்றலுக்காகக் கைக்குழந்தைகள் இருமுறை தட்டம்மைக்கான தடுப்பூசியைப் போட்டுக்கொள்ளவேண்டும் என்று சுகாதார அமைச்சர் ஓங் யி காங் நாடாளுமன்றத்தில் அளித்த எழுத்துபூர்வ பதிலில் குறிப்பிட்டுள்ளார்.

சிங்கப்பூரில் முதல் தடுப்பூசி குழந்தையின் 12வது மாதத்தில் போடப்படுகிறது. இரண்டாவது தடுப்பூசி, 15 மாதத்துக்கும் 18 மாதத்துக்கும் இடையே போடப்படுகிறது.

அந்தத் தடுப்பூசியை முன்கூட்டியே, அதாவது, 12 மாதத்துக்கும் குறைவான கைக்குழந்தைக்குப் போட்டால் எதிர்ப்பாற்றல் நீண்டநாள் இருக்காது என்று தொற்றுநோய் நிபுணர்கள் கூறினர்.

காற்றின் மூலமும் நேரடித் தொடர்பாலும் தட்டம்மைக் கிருமி பரவும். பாதிக்கப்பட்டவர்களுக்குக் காய்ச்சல், இருமல், சளி, தொண்டைப் புண், தோல் அழற்சி உள்ளிட்ட அறிகுறிகள் தென்படலாம்.

அதற்குக் குறிப்பிட்ட சிகிச்சை கிடையாது. பலர் இரண்டு, மூன்று வாரங்களில் குணமடைந்துவிடுவார்கள்.

இருப்பினும், தட்டமையால் சிலருக்கு, குறிப்பாக, ஐந்து வயதுக்குக் கீழ் உள்ள குழந்தைகளுக்கு மூளைவீக்கம், நிமோனியா எனப்படும் நுரையீரல் அழற்சி போன்ற கடுமையான சிக்கல்கள் ஏற்படலாம்.

குறிப்புச் சொற்கள்