எச்ஐவி பரிசோதனை செய்துகொள்ள தொற்றுநோய் அமைப்பு அறிவுரை

எச்ஐவி பரிசோதனை செய்துகொள்ள தொற்றுநோய் அமைப்பு அறிவுரை

2 mins read
8fb86b08-d405-41f7-b4c0-41545c6102ca
சிங்கப்பூரில் எச்ஐவி நோயால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை படிப்படியாகக் குறைந்துவருவதாகப் புதிதாகத் தொடங்கப்பட்ட தொற்றுநோய் அமைப்பு தெரிவித்தது. - படம்: சாவ்பாவ்

சிங்கப்பூரில் உள்ள பெரியவர்கள் அனைவரும் வாழ்க்கையில் ஒரு முறையாவது எச்ஐவி பரிசோதனையைச் செய்துகொள்ளும்படி புதிதாக அமைக்கப்பட்டுள்ள தொற்றுநோய் அமைப்பு அறிவுறுத்தியுள்ளது.

எச்ஐவி இருப்பதைக் கண்டறியும் தனிநபர்கள் முன்கூட்டியே அதற்கான சிகிச்சைகளைப் பெறலாம் என்றும் மற்றவர்களுக்கு அது பரவுவதைத் தடுக்க முடியும் என்றும் அமைப்பு குறிப்பிட்டது.

“அபாயம் ஏற்படக்கூடிய வகையிலான உடலுறவு நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் மூன்றிலிருந்து ஆறு மாதங்களுக்கு ஒரு முறையாவது எச்ஐவி பரிசோதனைகளைச் செய்துகொள்ளவேண்டும்,” என்ற அமைப்பு, எச்ஐவி சுயப் பரிசோதனைக் கருவிகள் மருந்துக் கடைகளில் கடந்த ஆண்டிலிருந்து விற்கப்படுவதை நினைவூட்டியது.

எச்ஐவி பரிசோதனைகளைக் கூடுதலானோர் மேற்கொள்ளவும் முன்கூட்டியே சிகிச்சைகளைத் தொடங்கவும் வகைசெய்ய தொற்றுநோய்ச் சட்டத்தில் 2024ஆம் ஆண்டு மாற்றம் செய்யப்பட்டது.

சிங்கப்பூரில் எச்ஐவி நோயால் பாதிக்கப்பட்டோரில் கிட்டத்தட்ட 90 விழுக்காட்டினர் தங்களுக்கு எச்ஐவி இருப்பதை அறிந்திருப்பதாகத் தொற்றுநோய் அமைப்பு சுட்டியது.

அவர்களில் 96 விழுக்காட்டினர் சிகிச்சை பெறுகின்றனர். சிகிச்சைப் பெறுவோரில் 94 விழுக்காட்டினரிடையே எச்ஐவி நோய்ப் பரவல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

எச்ஐவி பரிசோதனையை முன்கூட்டியே மேற்கொண்டு தகுந்த சிகிச்சையைக் கூடுதலானோர் பெற தொடர்ந்து ஊக்குவிக்கவிருப்பதாகக் கூறிய தொற்றுநோய் அமைப்பு, முடிந்தவரை திருமணம் செய்துகொண்ட துணைக்கோ ஒரு நபருக்கோ உண்மையாக இருந்து பலருடன் உடலுறவு வைத்துக்கொள்வதைத் தவிர்க்கும்படி ஆலோசனை வழங்கியது.

சிங்கப்பூரில் உள்ள எச்ஐவி பாதிப்பு குறித்து தகவல் வெளியிட்ட தொற்றுநோய் அமைப்பு, கடந்த ஆண்டு சிங்கப்பூரர்கள், நிரந்தவராசிகள் என 166 பேரிடம் எச்ஐவி நோய் புதிதாக உறுதிசெய்யப்பட்டதைப் பகிர்ந்துகொண்டது.

அவர்களையும் சேர்த்து சிங்கப்பூரில் எச்ஐவி நோயால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 7,248.

இருப்பினும், ஒவ்வோர் ஆண்டும் எச்ஐவி நோயால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை படிப்படியாகக் குறைந்துவருகிறது என்று அமைப்பின் புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.

2009ஆம் ஆண்டிலிருந்து 2019ஆம் ஆண்டுவரை 300லிருந்து 500 பேரிடம் எச்ஐவி நோய் புதிதாக உறுதிசெய்யப்பட்டது.

அந்த எண்ணிக்கை 2020ஆம் ஆண்டுக்கும் 2023ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் 200லிருந்து 270க்கு இடைப்பட்டிருந்தது.

குறிப்புச் சொற்கள்