ஊடுருவப்பட்ட குளோபல் பள்ளிகள் குழுமம்; தனிநபர் தகவல் பாதுகாப்பு ஆணையம் விசாரணை

ஊடுருவப்பட்ட குளோபல் பள்ளிகள் குழுமம்; தனிநபர் தகவல் பாதுகாப்பு ஆணையம் விசாரணை

2 mins read
bc907302-1438-4f2a-95a8-ab3ca8fe548d
குளோபல் பள்ளிகள் குழுமத்தில் ஏற்பட்ட இணைய ஊடுருவல் குறித்து தனிநபர் தகவல் பாதுகாப்பு ஆணையம் விசாரணை நடத்தவிருக்கிறது. - படம்: சாவ்பாவ்

சிங்கப்பூரின் தனிநபர் தகவல் பாதுகாப்பு ஆணையம், குளோபல் பள்ளிகள் குழுமத்தில் ஏற்பட்ட இணைய ஊடுருவல் குறித்து விசாரணை நடத்தவிருப்பதாகத் தெரிவித்துள்ளது.

அந்தக் குழுமம், குளோபல் இந்தியன் அனைத்துலகப் பள்ளியை நிர்வகிக்கிறது.

“ஊடுருவல் சம்பவம் குறித்து ஆணையம் அறிந்துள்ளது. அதுகுறித்து விசாரணை நடத்தப்படும்,” என்று ஆணையப் பேச்சாளர் ஜூன் 10ஆம் தேதி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் கூறினார்.

குளோபல் இந்தியன் அனைத்துலகப் பள்ளியைச் சேர்ந்த மாணவர்களின் தனிப்பட்ட விவரங்கள் ஊடுருவப்பட்ட சம்பவம் குறித்து ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சுக்குத் தெரிவிக்கப்பட்டது. மாணவர்களின் பெற்றோர், பள்ளியின் ஊழியர்கள் ஆகியோரின் விவரங்களும் ஊடுருவப்பட்டன.

கிட்டத்தட்ட 4.8 டெராபைட்ஸ் அளவிலான தரவுகள் ஊடுருவப்பட்டதாக ‘ஃபுல்கிரம் செக்’ என்ற இணைய ஊடுருவல் குழுவிடமிருந்து வந்த மின்னஞ்சலை ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் கண்டது.

வீட்டு முகவரிகள், கடப்பிதழ் எண்கள், சம்பள விவரங்கள் உள்ளிட்ட தனிப்பட்ட தகவல்கள் ஊடுருவப்பட்டதாக அந்தக் குழு குறிப்பிட்டது.

எனினும், எத்தனை பேர் பாதிக்கப்பட்டனர் என்பது தெளிவாகத் தெரியவில்லை.

சம்பவம் குறித்த ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சின் கேள்விகளுக்கு ஜூன் 11ஆம் தேதி குளோபல் பள்ளிகள் குழு பதிலளித்தது.

அதில் இணைய ஊடுருவல் இடம்பெற்றதை உறுதிப்படுத்திய குழு, எந்தளவுக்கு அதனால் பாதிப்பு ஏற்பட்டது என்பதை ஆராய்வதாகக் குறிப்பிட்டது.

“இருப்பினும், வெளிப்புற நிபுணர்களின் உதவியுடன் ஊடுருவல் சம்பவம் துரிதமாகக் கையாளப்பட்டது. சட்ட அமலாக்க அதிகாரிகள் உள்ளிட்ட தரப்புகளுக்குத் தகவல் அளித்துவிட்டோம்,” என்று குழுமத்தின் பேச்சாளர் கூறினார்.

ஊடுருவலைக் கட்டுப்படுத்திவிட்டதாகவும் பாதிக்கப்பட்ட இணையக் கட்டமைப்புகள் மறுசீரமைக்கப்பட்டுவிட்டதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

இத்தகைய சம்பவங்களை வன்மையாகக் கண்டிப்பதாகக் கூறிய அவர், மாணவர்கள், பெற்றோர், ஊழியர்கள் போன்றவர்களின் தனிப்பட்ட விவரங்களைப் பாதுகாப்பதற்குத் தொடர்ந்து முன்னுரிமை அளிக்கப்படும் என்றார்.

குளோபல் பள்ளிகள் குழுமத்தின் இணையத்தளத்தின்படி 11 நாடுகளில் அது 64 பள்ளிகளை நிர்வகிக்கிறது.

சிங்கப்பூரில் உள்ள குளோபல் இந்தியன் அனைத்துலகப் பள்ளி பொங்கோலில் செயல்படுகிறது.

இணையப் பாதுகாப்பை வலுப்படுத்துவதற்கான அறிவுரைகளை வழங்க குளோபல் பள்ளிகள் குழுமத்துடன் தொடர்பில் இருப்பதாகச் சிங்கப்பூர் இணையப் பாதுகாப்பு அமைப்பின் பேச்சாளர் தெரிவித்தார்.

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம், ஊடுருவல் குழு என்று சந்தேகிக்கப்படும் ‘ஃபுல்கிரம் செக்’, முதல்முறையாக வெளிச்சத்துக்கு வந்ததாக அறிக்கைகள் சுட்டுகின்றன.

அது எந்தவொரு குறிப்பிட்ட நாட்டுடனும் தொடர்புடையது அல்ல என்று அறியப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்
ஊடுருவல்இணையப் பாதுகாப்புவிசாரணை