பணவீக்கம், அடுத்த ஆண்டு (2027) உலகளவில் எரிசக்தி விலைக்கு ஏற்றவாறு படிப்படியாக மெதுவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேவேளை, எரிசக்தி விநியோகத்தில் தொடர்ந்து இடையூறுகள் ஏற்பட்டால் இங்கு பணவீக்கம் மோசமடைவதுடன் பொருளியல் வளர்ச்சி பாதிக்கப்படக்கூடும் என்றும் சிங்கப்பூர் நாணய ஆணையம் முன்னுரைத்துள்ளது.
ஆணையம் செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 14) வெளியிட்ட காலாண்டுக்கான ஒட்டுமொத்தப் பொருளியல் ஆய்வறிக்கையில் இத்தகவல் இடம்பெற்றுள்ளது.
இந்நிலையில், ஈரான் போர் காரணமாக ஏற்பட்டுள்ள எரிசக்தி விநியோக இடையூறுகள் சிங்கப்பூர்ப் பொருளியலை நேரடியாகவும் மறைமுகமாகவும் பாதிக்கக்கூடும் என்றும் அஞ்சப்படுகிறது.
போக்குவரத்து நிறுவனங்களுடன் கட்டுமான, சொத்துச் சந்தை, உணவு, பானத் துறைகளில் உள்ள நிறுவனங்கள் விலை உயர்வை எதிர்கொள்ளக்கூடும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. சிங்கப்பூரில் ஏற்கெனவே எரிசக்தி விநியோகத் துறை தாக்கத்தைச் சந்தித்து வருவதாகச் சிங்கப்பூர் நாணய ஆணையம் தெரிவித்தது.
சிங்கப்பூர்த் துறைமுகம், உலகின் ஆகப் பெரிய எரிபொருள் நிரப்புத் துறைமுகமாக விளங்குகிறது. அதற்கு எரிசக்தி விநியோகத் துறை அடிப்படையாக இருந்து வருகிறது.
ஒட்டுமொத்தமாக, உலகளவில் எரிசக்தி விநியோகத்துக்குப் பாதிப்பு ஏற்பட்டால் பணவீக்க அதிகரிப்பு, வலுவற்ற வளர்ச்சி போன்ற பிரச்சினைகளைச் சிங்கப்பூர் எதிர்நோக்ககூடும் என்று ஆணையத்தின் ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
2022ஆம் ஆண்டுக்குப் பிறகு ஆணையம் அதன் நாணயக் கொள்கையை முதன்முறையாகக் கடுமையாக்கியுள்ளது. அதனைத் தொடர்ந்து ஆய்வறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
இவ்வாண்டு எல்லாப் பொருள்களுக்குமான பணவீக்க முன்னுரைப்பையும் அடிப்படைப் பணவீக்க முன்னுரைப்பையும் ஆணையம் உயர்த்தியுள்ளது; அது இப்போது 1.5லிருந்து 2.5 விழுக்காட்டுக்குள் இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இவ்விகிதம் முன்னதாக ஒன்றிலிருந்து இரண்டு விழுக்காடுவரை இருக்கும் என்று முன்னுரைக்கப்பட்டிருந்தது.
தொடர்புடைய செய்திகள்
பிப்ரவரி மாதம் 28ஆம் தேதி ஈரான்மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் தாக்குதல் நடத்தத் தொடங்கியதையடுத்து உலகில் எண்ணெய், எரிவாயு விலை பெரிய அளவில் கூடியது. பதில் நடவடிக்கையாக ஈரான், ஹோர்முஸ் நீரிணையைக் கிட்டத்தட்ட முழுமையாக மூடியது.
அமைதிக் காலத்தில் ஹோர்முஸ் நீரிணை வழியாகத்தான் பாரசீக வளைகுடாப் பகுதியிலிருந்து உலக நாடுகளுக்கு விநியோகிக்கப்படும் எண்ணெய், எரிவாயுவில் ஐந்தில் ஒரு பங்கு கொண்டுசெல்லப்படும்.
மத்திய கிழக்குப் பூசல் எத்தனை காலம் நீடிக்கும் என்பதும் அதனால் எண்ணெய், எரிவாயு போன்றவற்றின் விநியோகம் எத்தனை காலம் தடைபடும் என்பதும் தெளிவாகத் தெரியவில்லை.

