சிங்கப்பூரில் மிக வேகமாக வளரும் 100 நிறுவனங்களைக் கொண்ட பட்டியல் தொகுப்பு ஆண்டுதோறும் வெளியிடப்படுகிறது.
அந்த வகையில் 2025ஆம் ஆண்டில் சிங்கப்பூரில் வேகமாக வளர்ந்து வரும் நிறுவனங்களில் தகவல் தொழில்நுட்பம், மென்பொருள், நிதிச் சேவைகள், சொத்துகள் ஆகியவை அடங்கும்.
ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ், உலகளாவிய ஆய்வு நிறுவனமான ஸ்டடிஸ்டா ஆகியவை தொடுத்த இந்தப் பட்டியலில் இடம்பெறும் நிறுவனங்களில் ஏறத்தாழ 40 விழுக்காடு நிறுவனங்கள் இந்தத் துறைகளைச் சேர்ந்தவை.
செல்வ நிர்வாகம், ‘கோ-லிவிங் ஸ்பேசஸ்’ எனப்படும் குறைந்தது மூன்று அந்நியர்கள் ஒரே வீட்டில் இணைந்து வசிப்பது, செயற்கை நுண்ணறிவு போன்ற சேவைகளை இந்த நிறுவனங்கள் வழங்குகின்றன.
ஜனவரி 21ஆம் தேதியன்று வெளியிடப்பட்ட பட்டியலில் மின்வணிகம், விருந்தோம்பல் மற்றும் சுற்றுப்பயணம், கட்டுமானம், உற்பத்தி, சில்லறை வணிகம் போன்ற துறைகளைச் சேர்ந்த நிறுவனங்கள் இடம்பெற்றுள்ளன.
சிங்கப்பூரில் மிக வேகமாக வளரும் நிறுவனங்கள் பட்டியலில் 100 உள்ளூர் வணிகங்கள் இடம்பெற்றுள்ளன.
2020ஆம் ஆண்டுக்கும் 2023ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் இந்த நிறுவனங்களின் வருமானம் பேரளவில் வளர்ச்சி கண்டது குறிப்பிடத்தக்கது.
பட்டியலில் இடம்பெறும் தகுதியைப் பெற அந்த நிறுவனங்கள் வேறு எந்த அமைப்பையும் சார்ந்திடாமல் இருக்க வேண்டும். அதுமட்டுமல்லாது, அதன் தலைமையகம் சிங்கப்பூரில் அமைந்திருக்க வேண்டும். அத்துடன், 2020ஆம் ஆண்டில் குறைந்தது $150,000 வருமானமும் 2023ஆம் ஆண்டில் குறைந்தது $1.5 மில்லியன் வருமானமும் ஈட்டியிருக்க வேண்டும்.