விதிமீறல்: சிங்கப்பூர் பயனீட்டாளர் சங்கத்துக்கு $20,000 அபராதம்

விதிமீறல்: சிங்கப்பூர் பயனீட்டாளர் சங்கத்துக்கு $20,000 அபராதம்

1 mins read
cdef36e5-6f10-4272-bf55-c0aceb760b26
2022, 2023 ஆம் ஆண்டுகளில் விதிமீறல்கள் நிகழ்ந்ததாகக் கூறப்பட்டது. - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

தனிநபர் தரவுப் பாதுகாப்புச் சட்டத்தை மீறியதற்காக சிங்கப்பூர் பயனீட்டாளர் சங்கத்துக்கு $20,000 அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது.

இது தொடர்பான தீர்ப்பை தனிநபர் தரவுப் பாதுகாப்பு ஆணையம் புதன்கிழமை (ஆகஸ்ட் 28) வெளியிட்டது.

சிங்கப்பூர் பயனீட்டாளர் சங்கம் தன்வசம் உள்ள அல்லது தனது கட்டுப்பாட்டில் உள்ள தனிநபர் தரவுகளைப் பாதுகாக்கப் போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யத் தவறியதாக அந்தத் தீர்ப்பில் கூறப்பட்டது.

மேலும், தனிநபர் தரவுப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் தனது கடமைகளை நிறைவேற்றத் தேவையான நடைமுறைகளையும் கொள்கைகளையும் உருவாக்கி, அமல்படுத்த அந்தச் சங்கம் தவறியதாகவும் ஆணையம் தெரிவித்து உள்ளது.

2022 ஆம் ஆண்டு அக்டோபர் மாதமும் 2023ஆம் ஆண்டு ஜூன் மாதமும் அந்த விதிமீறல்கள் நிகழ்ந்ததாகக் கூறப்பட்டது.

முதல் சம்பவத்தில் 22,542 மின்னஞ்சல் முகவரிகளும் அடுத்த சம்பவத்தில் 12,218 தனிநபர்களின் பயனீட்டாளர் தரவுகளும் கசிந்திருக்கும் சாத்தியம் நிகழ்ந்ததாகக் கூறப்பட்டது.

2022 அக்டோபர் 8ஆம் தேதி சிங்கப்பூர் பயனீட்டாளர் சங்கத்தின் பயனீட்டாளர்கள் சிலர் கோரப்படாத மின்னஞ்சல்களைப் பெற்றனர்.

பயனீட்டாளர்கள் அந்தச் சங்கத்தின் இணையத்தளத்தில் புகார் தெரிவிப்பதற்காகப் பயன்படுத்தப்படும் மின்னஞ்சல் முகவரியான online-submission@case.org.sg என்பதில் இருந்து மின்னஞ்சல்களை அவர்கள் பெற்றனர்.

பயனீட்டாளர்கள் புகார் எதுவும் தெரிவிக்காத நிலையில் அவர்களின் புகார்கள் கவனிக்கப்பட்டு வேறொரு துறைக்கு அனுப்பப்பட்டதாகவும் அதற்கான இழப்பீட்டுத் தொகை பெற அவர்கள் தகுதி பெற்றுள்ளதாகவும் மின்னஞ்சலில் கூறப்பட்டது.

அதுபோல அடுத்தடுத்து நிகழ்ந்ததால் சங்கத்திடம் அதுகுறித்து பயனீட்டாளர்கள் தெரிவித்தனர்.

குறிப்புச் சொற்கள்