பயங்கரவாதம் என்பது குறிப்பிட்ட அடையாளங்களுக்கு அப்பாற்பட்டது என்பதை உணர்த்தும் வகையில், முதன்முறையாக ஒரு பெண்ணைத் தீவிரவாதியாகச் சித்திரித்து புதிய விழிப்புணர்வு செய்தியை அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர். யாராக இருந்தாலும் தீவிரவாதப் போக்கிற்கு ஆளாகக்கூடும் என்பதை இது வலியுறுத்துகிறது.
வியாழக்கிழமை (மார்ச் 5) தொடங்கப்பட்ட இந்தப் புதிய எஸ்ஜிசெக்யூர் இயக்கத்தின் மூலம், பயங்கரவாத அச்சுறுத்தலைத் தடுப்பதற்கும் கண்டறிவதற்கும் அதை எதிர்கொள்வதற்கும் சிங்கப்பூரர்கள் எவ்வாறு கூடுதல் பங்களிக்க முடியும் என்பதை ஆராயுமாறு உள்துறை அமைச்சு கேட்டுக்கொண்டுள்ளது.
பீஷான் ஜங்ஷன் 8 கடைத்தொகுதியில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த ‘பிளே யோர் ரோல்’ இயக்கம், பயங்கரவாதத் தாக்குதலுக்கு முன்னும், பின்னும் மற்றும் தாக்குதலின்போதும் மக்கள் சுறுசுறுப்பாகச் செயல்படுவதை ஊக்குவிக்கிறது. இது 2026ஆம் ஆண்டில் தீவு முழுவதும் நடைபெறவுள்ள புதிய எஸ்ஜிசெக்யூர் சாலைக் காட்சிகளின் முதல் அங்கமாகும்.
சிங்கப்பூருக்கு பயங்கரவாத அச்சுறுத்தல் இன்னும் அதிகமாகவே உள்ளது. இணையம் வழியாக சுயமாகத் தீவிரவாதப் போக்கிற்கு மாறுவதே இதற்கு முக்கியக் காரணமாகும். குறிப்பாக, இளைஞர்கள் தீவிரவாதப் பாதைக்குத் தள்ளப்படுவது கவலையளிப்பதாக அமைச்சு தெரிவித்துள்ளது.
‘நாம் நினைப்பதை விட அருகில் உள்ளது’ எனும் தலைப்பு கொண்ட குறும்படமும் இயக்கத்தின் ஒரு பகுதியாகும்.
வீடமைப்பு வளர்ச்சிக் கழகக் குடியிருப்பில் ஒரு பெண் குண்டு வெடிக்கச் செய்யும் காட்சியுடன் குறும்படம் தொடங்குகிறது. அந்த நிலைக்கு அவர் தள்ளப்பட்டதன் பின்னணி அதில் காட்டப்படுகிறது. அவரது குடும்பத்தினரும் நண்பர்களும் கவனிக்கத் தவறிய எச்சரிக்கை அறிகுறிகள் அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.
வயது, பாலினம், மதம் அல்லது தொழில் ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல் யார் வேண்டுமானாலும் தீவிரவாதப் போக்கிற்கு ஆளாகலாம் என்பதே இதன் முக்கியச் செய்தி. சந்தேகத்திற்குரிய நடத்தைகளை முன்கூட்டியே அதிகாரிகளிடம் தெரிவிப்பதன் மூலம் சம்பந்தப்பட்ட நபருக்குச் சரியான நேரத்தில் உதவி கிடைக்கச் செய்ய முடியும் என்று வலியுறுத்தப்படுகிறது.
சட்ட அமைச்சரும் உள்துறை இரண்டாவது அமைச்சருமான எட்வின் டோங், வெளியுறவு மற்றும் உள்துறை மூத்த துணையமைச்சர் சிம் ஆன்னும் நிகழ்வில் கலந்துகொண்டனர்.
தொடர்புடைய செய்திகள்
“சிங்கப்பூரில் பயங்கரவாதத் தாக்குதல் நடப்பதற்கான வாய்ப்பு இல்லை என்று பலர் நினைக்கிறார்கள். ஆனால் பயங்கரவாதம் நாம் நினைப்பதைவிட நமக்கு அருகில் இருக்கலாம். இது ‘நடக்குமா?’ என்பதல்ல, ‘எப்போது நடக்கும்?’ என்பதுதான் கேள்வி. எனவே வெறும் விழிப்புணர்வோடு நின்றுவிடாமல், சிங்கப்பூரைப் பாதுகாப்பாக வைத்திருக்க மக்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என்று அமைச்சர் டோங் தெரிவித்தார்.

