செய்தி வாசிப்பதன் மூலம் துடிப்புடன் மூப்படைவதற்கான திட்டம்

2 mins read
fcd22770-8c83-4ab7-b2d3-a6192c08fbee
‘லெட்ஸ் டாக் நியூஸ்’ திட்டத்தின் தொடக்கவிழாவில் கலந்துகொண்ட துணை அமைச்சர் பே யாம் கெங் (நடுவில்). அவருடன் எஸ்பிஎச் மீடியா தலைமை நிர்வாக அதிகாரி சான் யெங் கிட் (வலமிருந்து இரண்டாவது), எஸ்பிஎச் மீடியா துணை தலைமை நிர்வாக அதிகாரி குயெக் யு சுவாங் (இடது). - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

தீவு முழுவதும் உள்ள கிட்டத்தட்ட 60 துடிப்புடன் மூப்படைதல் நிலையங்களில் இருக்கும் மூத்தோர் தங்கள் வாழ்வின் பொற்காலத்தை மகிழ்ச்சியாகவும் அர்த்தமுள்ளதாகவும் கழிக்க உதவும் வகையில் பல மொழிகளில் செய்திகள், கவனமாகத் தொகுக்கப்பட்ட வாசிப்புகள், சிறப்பு உள்ளடக்கங்கள் அறிமுகம் காணவுள்ளன.

எஸ்ஜி60 கொண்டாட்டத்தை முன்னிட்டு எஸ்பிஎச் மீடியா, எஸ்பிஎச் அறநிறுவனம் இரண்டும் இணைந்து ‘லெட்ஸ் டாக் நியூஸ்’ எனும் இப்புதிய திட்டத்தைத் தொடங்கியுள்ளன.

எஸ்பிஎச் மீடியாவின் இதுபோன்ற முதல் சமூகச் செய்திப் பகிர்தல் திட்டமான ‘லெட்ஸ் டாக் நியூஸ்’, சிங்கப்பூர் முழுவதும் மூத்தோரிடம் வாசிக்கும் மகிழ்ச்சியையும் அன்றாடத் தகவல்களைத் தெரிந்துகொள்வதன் முக்கியத்துவத்தையும் கொண்டுசேர்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

கலாசார, சமூக, இளையர் துறை மற்றும் போக்குவரத்து துணை அமைச்சர் பே யாம் கெங், ‘லெட்ஸ் டாக் நியூஸ்’ திட்டத்தை நமது தெம்பனிஸ் நடுவத்தில் ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 26) அதிகாரபூர்வமாகத் தொடங்கிவைத்தார்.

இத்திட்டம் மூலம் மூத்தோர் தொடர்ந்து ஈடுபாடு உள்ளவர்களாகவும் சுறுசுறுப்பாக இயங்கவும் சமூகத்திற்குப் பங்களிப்பதற்கான அதிகாரம் பெற்றவர்களாகவும் இருக்க முடியும் என்று திரு பே கூறினார்.

“மூத்தோர் தங்கள் சகாக்களுடன் செய்திப் பகிர்வு அமர்வுகளை நடத்த ஊக்குவிக்கப்படுவார்கள். இதன்மூலம் உறவுகளை வலுப்படுத்திக்கொள்வதுடன் அவர்கள் சேர்ந்து கற்றுக்கொள்வதற்கும் வழியமைக்கப்படும்,” என்றார் திரு பே.

இத்தகைய முயற்சிமூலம் யாரும் பின்தங்கிவிடாமல் இருக்க அனைவரும் ஒருவருக்கொருவர் தொடர்ந்து உதவ வேண்டும் என்று அவர் ஊக்குவித்தார்.

எஸ்பிஎச் மீடியா துணை தலைமை நிர்வாக அதிகாரி குயெக் யு சுவாங், தங்களுக்குக் கிடைக்கும் தகவல்களின் உண்மையைக் கண்டறிய மூத்தோர் சிரமப்படும் நிலையில், ‘லெட்ஸ் டாக் நியூஸ்’ திட்டம் உதவியாக இருக்கும் என்றார்.

துடிப்புடன் மூப்படைதல் நிலையங்களில் இருக்கும் மூத்தோர், இந்த ஓராண்டுகால திட்டம்மூலம் எஸ்பிஎச் மீடியாவின் பல்வேறு மொழிச் செய்தி வெளியீடுகளின் அச்சுப் பிரதிகளையும், மின்னிலக்கப் பதிவுகளையும் வாரநாள்களில் பெறுவர்.

ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ், சாவ் பாவ், ஷின் மின், பெரித்தா ஹரியான், தமிழ்முரசு ஆகியவை அந்த வெளியீடுகளில் அடங்கும்.

இத்திட்டத்திற்கு மூத்தோருடனான பகிர்வைச் செழுமைப்படுத்த, தேர்ந்தெடுக்கப்பட்ட மின்னிலக்க நூல்கள், ஆவணங்களை வழங்க தேசிய நூலக வாரியம் ஆதரவளிக்கிறது.

மோசடி விழிப்புணர்வு, ஊடகக் கல்வியறிவு, சுகாதாரம் போன்ற தலைப்புகளில் மூத்தோருக்கான பகிர்தல் அமர்வுகளுக்கும் ஏற்பாடு செய்யப்படவுள்ளன.

நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்துடன் கைகோத்து மாணவர்கள் இத்திட்டத்தில் தொண்டூழியம் புரிவதற்கான வாய்ப்புகளும் வழங்கப்படவுள்ளன.

மாணவர்கள் தொண்டூழியம் புரிவதற்கான பயிற்சியை எஸ்பிஎச் மீடியா வழங்கவிருக்கிறது.

ஓய்வுபெற்ற திரு தயாளன் ஆறுமுகம், 75, தமிழ்முரசு நாளிதழைப் படிக்காத நாளே இல்லை.

துடிப்புடன் மூப்படைதல் நிலையங்களுக்குச் செல்லும் அவர், மூத்தோருக்கு இத்தகைய திட்டம் ஏற்பாடு செய்யப்படும்போது அவர்களால் சுறுசுறுப்பாகவும் நாட்டு நடப்புகளை நன்கு அறிந்துகொள்ளவும் முடியும் என்று கருதுகிறார்.

துடிப்பான மூப்படைதல் நிலையங்களைச் சேர்ந்த மூத்தோர்.
துடிப்பான மூப்படைதல் நிலையங்களைச் சேர்ந்த மூத்தோர். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
குறிப்புச் சொற்கள்