தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

வாழ்க்கைச் செலவினத்தைச் சமாளிக்கும் முயற்சி: இலவச உணவுப் பொருள் விநியோகம்

2 mins read
4492a1ae-c320-4d81-a365-47767ad3e932
‘லவ் கனெக்ட்’ ஈரச் சந்தை, 2022ஆம் ஆண்டில் லசாடாவின் ரெட்மார்ட், ஜாமியா சிங்கப்பூர் போன்ற பங்காளித்துவ அமைப்புகளின் உதவியோடு தொடங்கப்பட்டது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
multi-img1 of 2

கம்போங் கிளாம் வட்டார வாடகை வீடுகளில் வசிக்கும் குடியிருப்பாளர்கள், ஒவ்வொரு சனிக்கிழமையும் இலவசமாக உணவுப் பொருள்களை எடுத்துச் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஜாலான் புசார் சமூக மன்றத்தின் ‘லவ் கனெக்ட்’ ஈரச் சந்தையிலிருந்து ‘செர்ரி’ தக்காளிப் பழக்கூடைகள், ‘சியே சிம்’ கீரைக் கட்டுகள், ‘சால்மன்’ மீன் துண்டுகள் (salmon fillets) போன்றவற்றை அவர்கள் இலவசமாகப் பெறலாம்.

வசதிகுறைந்த குடும்பத்தினரின் வாழ்க்கைச் செலவினச் சுமையைக் குறைக்கும் நோக்கில் சிங்கப்பூரில் அண்மைய ஆண்டுகளில் தொடங்கப்பட்ட 300க்கும் அதிகமான சமூக முயற்சிகளில் இந்த ஈரச் சந்தையும் அடங்கும்.

கம்போங் சாய் சீ பகுதியில் இலவச மூக்குக் கண்ணாடிகள், ராடின் மாஸ் வட்டாரத்தில் சலுகை விலையில் பாரம்பரிய சீன மருந்துகள் போன்றவை இத்தகைய இதர சில முயற்சிகளாகும். பெரும்பாலான முயற்சிகளின்கீழ், குறைந்த வருமான சிங்கப்பூரர்களுக்கு மளிகைப் பொருள்கள் வழங்கப்படுகின்றன.

அரசாங்கத்தின் ‘சிடிசி’ பற்றுச்சீட்டுகள் போன்ற தேசிய அளவிலான திட்டங்களுக்குத் துணைசெய்யும் விதமாக இத்தகையத் திட்டங்கள் அமைந்துள்ளன என்று ஜனவரி 19ஆம் தேதி பிரதமர் லாரன்ஸ் வோங் கூறினார்.

உதவி வழங்கும் அத்தகைய மூன்று திட்டங்களை ஜனவரி மாதம் நேரில் கண்டு விவரமறிந்தது ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்.

ஒவ்வொரு சனிக்கிழமையும் புதிய உணவுப் பொருள்களை வழங்கும் ஜாலான் புசார் சமூக மன்றத் திட்டம், ஜூரோங் வெஸ்ட்டில் உள்ள நன்யாங் சமூக மன்றத்தின் மாதம் இருமுறை இலவச உணவுப் பொருள்களைப் பெறும் திட்டம், மெக்பர்சன் வட்டாரத்தில் ஆண்டுக்கு இருமுறை மொத்த விற்பனை விலையில் உணவுப் பொருள்களை விற்கும் திட்டம் ஆகியவை அவை.

ஜாலான் புசார் சமூக மன்றத்தின் சனிக்கிழமைதோறும் இலவச உணவுப் பொருள் வழங்கும் திட்டத்தின் மூலம் 200க்கும் மேற்பட்டோர் பயனடைகின்றனர். இவர்களில் சிலர் இலவச மளிகைப் பொருள்களைப் பெற்றுக்கொள்வதால் மாதாமாதம் 50 முதல் 60 வெள்ளி சேமிக்க முடிவதாகக் கூறுகின்றனர்.

இலவச உணவுப் பொருள்களை வழங்குவது மட்டுமன்றி, குடியிருப்பாளர்கள் பேசி மகிழவும் சமூகப் பிணைப்பை ஏற்படுத்திக்கொள்ளவும் தளமாக விளங்குகிறது இச்சந்தை.

மாதத்தின் கடைசி சனிக்கிழமை, இந்தச் சந்தையில் பயன்படுத்திய ஆடைகளும் பொம்மைகளும் சிறுவர்களுக்கு வழங்கப்படுகின்றன.

குறிப்புச் சொற்கள்