பெருவிரைவு ரயில் நிலையங்கள், பேருந்து நிழற்கூடங்கள், சிங்கப்பூர் முழுவதும் உள்ள நடைமேடைத் திரைக் கதவுகள் போன்ற பொது இடங்களில் பயணிகள் சிறிது நேரம் சமூக கதைகளைப் படிப்பதற்கான புதிய முயற்சி அறிமுகம் கண்டுள்ளது.
தலைமுறைகளுக்கு இடையேயான சமூகத்தின் கதைகளை உயிர்ப்பிக்கும் சிறப்பு முயற்சியாக ‘ஸ்டோரீஸ் அக்ராஸ் ஜெனெரேஷன்ஸ்’ எனப்படும் இந்த முயற்சி தொடங்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூர் எழுத்தாளர் விழா, எஸ்எம்ஆர்டி நிறுவனத்துடன் இணைந்து இந்த முயற்சியை முன்னெடுத்துள்ளது.
பிராஸ் பாசா பெருவிரைவு ரயில் நிலையத்தில் உள்ள நடைமேடைத் திரைக் கதவுகள் முதல், டோபி காட், உட்லண்ட்ஸ், டோவர் பூகிஸ், பாய லேபார், லோரோங் சுவான், புவன விஸ்தா போன்ற பெருவிரைவு ரயில் நிலையங்களில் கதைகளின் சுவரொட்டிகளை நவம்பர் மாதம் 19ஆம் தேதி வரை காண முடியும்.
கடந்த கால நினைவுகளும் படிப்பினைகளும் நிகழ்காலத்தையும் எதிர்காலத்தையும் எப்படி வழிநடத்தி ஊக்கமளிக்க முடியும் என்பது இந்த முயற்சியின் நோக்கங்களில் ஒன்று.
வியாழக்கிழமை (அக்டோபர் 23) கலாசார, சமூக, இளையர்துறை, போக்குவரத்து, துணை அமைச்சர் பே யாம் கெங் இந்த முயற்சியின் தொடக்க நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.
சிங்கப்பூர் எழுத்தாளர் விழா இயக்குநர் யோங் ஷு ஹுங் இந்தக் கதைகளின் மூலம் இளைய தலைமுறையினர் அன்றைய காலத்தில் மூத்தோர் வாழ்ந்த அனுபவங்களை எடுத்துக்கொண்டு அவர்களின் வாழ்க்கையை நகர்த்த வழிகாட்டுதல் பெறலாம் என்றார்.
“எழுத்தாளர் விழாவில் மாறுபட்ட ஒன்றைச் சேர்க்க வேண்டும் என்பதற்காக இந்த முயற்சி முன்னெடுக்கப்பட்டது. கதைகள் புத்தகங்களில் மட்டுமல்லாமல் நம் குடும்பங்களிலும், சமூகங்களிலும் உள்ளன என்பதை இந்த முயற்சி உணர்த்துகிறது,” என்று கூறினார் திரு யோங் ஷு ஹுங்.
தொடர்புடைய செய்திகள்
வெவ்வேறு தலைமுறைகளைச் சேர்ந்த இருவர், மூத்தோர் இளையவரின் வயதில் இருந்தபோது வாழ்க்கை எப்படி இருந்தது என்பதைப் பற்றி இந்த முயற்சியில் பகிர்ந்துகொள்ளலாம். அவர்கள் குடும்ப உறுப்பினர்களாக, பணித் தோழர்களாக, நண்பர்களாக, தலைமுறை இடைவெளி கொண்டவர் எவராகவும் இருக்கலாம்.
நவம்பர் மாதம் ஏழாம் தேதி வரை அவர்கள் கதைகளைப் பதிவு செய்யலாம்.
அதிக வாக்குகள் பெரும் கதைகளுக்கு மண்டாய் ரெயின்ஃபாரஸ்ட் ரிசார்ட் பை பேன்யன் ட்ரீயின் ஆதரவுடன் ஒரு ஆடம்பர தங்கும் விடுதிக்குச் செல்லும் வாய்ப்பு காத்துக்கொண்டிருக்கிறது.

