ரகசியத் தகவல்களை வைத்து வர்த்தகம்: குற்றச்சாட்டுகளை எதிர்நோக்க நாடுகடத்தப்பட்ட சிங்கப்பூரர்

ரகசியத் தகவல்களை வைத்து வர்த்தகம்: குற்றச்சாட்டுகளை எதிர்நோக்க நாடுகடத்தப்பட்ட சிங்கப்பூரர்

படம்: ஜோ‌ஷ் கெ / ஃபேஸ்புக்

21 Nov 2026 - 8:28 pm

2 mins read

நிறுவனத்துக்குள் பெறக்கூடிய தகவல்களைக் கொண்டு பங்குச்சந்தை வர்த்தகத்தில் பலன்பெறும் நடவடிக்கைகளில் ஈடுபட்ட கட்டமைப்புக்கு உதவியதாக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ள சிங்கப்பூர் ஆடவர் ஒருவர் அமெரிக்காவுக்கு நாடுகடத்தப்பட்டுள்ளார்.

அந்தக் கட்டமைப்பு, உலக அளவில் ‘இன்சைடர் டிரேடிங்’ எனப்படும் தவறான முறையில் வர்த்தகத்தில் ஈடுபட்டு பல மில்லியன் வெள்ளி சம்பாதித்ததாக நம்பப்படுகிறது. அதற்கு உதவியதாக 35 வயது ‌ஷி கெமீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

2024ல் சிங்கப்பூரில் கைது

அவர் வெள்ளிக்கிழமை (நவம்பர் 20) முதன்முறையாக போஸ்டன் நகரில் உள்ள அமெரிக்க மத்திய அரசாங்கத்தின்கீழ் வரும் நீதிமன்றத்தில் முன்னிலையானார். கள்ளப்பணத்தை நல்ல பணமாக்கியது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ள 2024ஆம் ஆண்டு சிங்கப்பூரில் கைது செய்யப்பட்ட அவர் நாடுகடத்தப்பட்டதாக அமெரிக்க நீதித்துறை அமைச்சு கூறியது.

முதலீட்டு வங்கி அதிகாரிகள் உள்ளிட்டோர் தந்த ரகசியத் தகவல்களைக் கொண்டு வர்த்தகத்தில் லாபம் பார்க்கும் நடவடிக்கைகள் பல ஆண்டுகளாய் தொடர்ந்ததாக நம்பப்படுகிறது. அதன் தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள ஒன்பது பேரில் ‌கெயும் ஒருவர்.

பிரான்சில் முன்பு முதலீட்டு வங்கி அதிகாரியாகப் பணியாற்றிய சேமி குவாட்ஜா, அவருடன் பிரெஞ்சு உணவகம் ஒன்றை நடத்திய ஈமா சாஃபி ஆகியோருடன் கெ தவறான பங்குச்சந்தை வர்த்தகத்தில் ஈடுபட்டதாக அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் கூறுகின்றனர். இவ்வழக்கில் குவாட்ஜா உட்பட பெரும்பாலான பிரதிவாதிகளை அமெரிக்கா, வெளிநாடுகளுக்குத் தப்பியோடிய குற்றவாளிகளாக வகைப்படுத்தியுள்ளது.

சிங்கப்பூர் நீதிமன்றத்தின் உத்தரவு

சிங்கப்பூரில் உள்ள நீதிமன்றம் ஒன்று கெயை அமெரிக்காவுக்கு நாடுகடத்தவேண்டும் என்று அண்மையில் தீர்ப்பளித்தது. அவர் வரும் டிசம்பர் மாதம் 16ஆம் தேதி மறுபடியும் அமெரிக்க மத்திய அரசாங்கத்தின்கீழ் வரும் நீதிமன்றத்தில் முன்னிலையாவார்.

தனது கட்சிக்காரர் குற்றச்சாட்டுகளை மறுப்பார் என்றும் அவர் தரப்பில் தீவிரமான வாதத்தை எதிர்பார்க்கலாம் என்றும் கெயின் வழக்கறிஞர் கெவின் பேரன் மின்னஞ்சல்வழி தெரிவித்தார்.

இதுகுறித்து குவாட்ஜாவின் வழக்கறிஞர் உடனடியாகக் கருத்து தெரிவிக்கவில்லை. 2025லிருந்து அமெரிக்காவில் தடுப்புக் காவலில் இருந்துவரும் சாஃபி குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார்.

குவாட்ஜா, சாஃபி, கெ மூவரும் 2016லிருந்து 2024க்கு இடைப்பட்ட காலத்தில் தவறான முறையில் பங்குச்சந்தை வர்த்தகத்தில் சம்பாதிக்கும் நோக்கில் ரகசியத் தகவல்களைப் பெறுவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் கூறுகின்றனர்.

குறிப்புச் சொற்கள்